தென்னாப்பிரிக்கா மண்ணில் 5 விக்கெட்.. டி20 போட்டியில் அசத்திய தீப்தி சர்மா!
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 4வது டி20யில் தீப்தி சர்மாவின் அசத்தல் பந்துவீச்சால் இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்த்தது.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னப்பிரிக்கா அணி மூன்றிலும் வென்று தொடை கைப்பற்றிய நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி நேற்று நடைபெற்றது.
ஜோஹன்பெர்க்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து பேட்டர்களின் பங்களிப்பால் 20 ஓவரில் 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.
இந்திய அணியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பின்னர் தீப்தி சர்மா, 4 ஓவரில் வெறும் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒரு இந்திய வீராங்கனை டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தும் இரண்டாவது 5 விக்கெட்-ஹால் ஆகும்.

