முதல் பந்திலேயே கம்மின்ஸை சிக்சர் அடித்த சூர்யவன்ஷி.. புகழ்ந்த பேட் கம்மின்ஸ்! என்ன சொன்னார்..?
15 வயது வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்தில் 12 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்தார். முதல் பந்திலேயே பேட் கம்மின்ஸை சிக்சர் அடித்த அவர், பும்ரா, ஹசல்வுட் போன்ற முன்னணி பவுலர்களையும் துவம்சம் செய்துள்ளார். போட்டிக்குப் பின் கம்மின்ஸ், சூர்யவன்ஷி தான் தனது புதிய ஃபேவரட் பிளேயர் என புகழ்ந்தார்.
உலக கிரிக்கெட்டை வெறும் 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ஆச்சரியப்படுத்திவருகிறார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரகளான பும்ரா, ஹசல்வுட் போன்ற பவுலர்களை அசால்ட்டாக சிக்சருக்கு அனுப்பிய சூர்யவன்ஷி, பல கிரிக்கெட் ஜாம்பவான்களை மிரளவைத்தது மட்டுமில்லாமல் கம்மின்ஸையும் விட்டுவைக்கவில்லை.
நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யவன்ஷி, பேட் கம்மின்ஸை எதிர்கொண்டு முதல் பந்திலேயே சிக்சருக்கு பறக்கவிட்டார். 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 36 பந்தில் சதமடித்த சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்தார்.
இந்தசூழலில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் சூர்யவன்ஷியை பாராட்டிவரும் நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸும் பாராட்டியதோடு தன்னுடைய புதிய ஃபேவரட் பிளேயர் சூர்யவன்ஷி தான் என்று புகழ்ந்தார்.
ஃபேவரட் பிளேயர் சூர்யவன்ஷி..
சூர்யவன்ஷி ஒரு அதிரடி சதத்தை பதிவுசெய்தாலும், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டு முயற்சியால் ராஜஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.
இந்நிலையில் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் பேட் கம்மின்ஸ், சூர்யவன்ஷியின் பேட்டிங்கை பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர், “என்னுடைய புதிய ஃபேவரட் பிளேயர் சூர்யவன்ஷி தான். அவர் பந்தை மிகவும் கடுமையாக அடிக்கிறார், அதைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கியுள்ளார்.
ஒரு பவுலராக நீங்கள் துல்லியமாக வீசவேண்டும், சற்று தவறுசெய்தாலும் தூக்கி வெளியில் அடித்துவிடுகிறார். அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது” என பாராட்டி பேசியுள்ளார்.

