CSK or DC..? ஃபிளெமிங் vs பதானி மோதலில் யாருக்கு வெற்றி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் பதில்!
2026 ஐபிஎல் தொடரில் புள்ளி எதுவும் பெறாத ஒரே அணி சிஎஸ்கே. ஏலத்தில் தவறான வீரர் தேர்வு, டெத் பவுலர், ஃபினிஷர் பேக்கப் இல்லாமை குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன. ஃபிளெமிங் தோனி இல்லாமல் கோப்பை வெல்ல முடியாது என டிசி கோச் ஹேமங் பதானி விமர்சித்த நிலையில், சேப்பாக்கில் இன்று ஃபிளெமிங் vs பதானி மோதல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளில் 9 அணியும் புள்ளிகளை பெற்றுவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இன்னும் ஒரு புள்ளியை கூட பெறவில்லை. இதற்கு சென்னை அணி ஏலத்திலேயே வீரர்களை தேர்வுசெய்ததில் கோட்டைவிட்டுவிட்டது எனவும், டெத் பவுலர், ஃபினிசர்களுக்கு பேக்கப் வீரர்களை இல்லை எனவும் பல்வேறு குறைகள் சொல்லப்படுகின்றன.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்விக்கு தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃபிளெமிங்கே காரணம் என்றும், அவரால் தோனியில்லாமல் கோப்பை வெல்ல முடியவில்லை எனவும் தற்போதைய டெல்லி கேபிடல்ஸின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறிய வீடியோ வைரலாகி பேசுபொருளானது.
ஹேமங் பதானியின் கருத்தை போன்றே முன்னாள் சிஎஸ்கே வீரர்களான லட்சுமதிபதி பாலாஜி, சுப்ரமணியம் பத்ரிநாத் இருவரும் ஃபிளெமிங் இன்னும் 10 ஆண்டுக்கு முன்பிருந்த செயல்முறையையே பின்பற்றுவதாக விமர்சித்திருந்தனர்.
இந்தசூழலில் தான் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவிருப்பதால், ஃபிளெமிங் மற்றும் பதானி இடையேயான மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஃபிளெமிங் vs பதானி.. யாருக்கு வெற்றி..?
கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங்கை விமர்சித்திருந்த ஹேமங் பதானி, தோனியால் தான் ஃபிளெமிங் மிகப்பெரிய கோச்சாக இருக்கிறார், ஆனால் தோனி இல்லாமல் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை, ஐபிஎல் தவிர்த்து பல லீக்களில் கோச்சாக இருந்தாலும் அவரால் வெற்றிகரமான கோச்சாக இருக்கமுடியவில்லை. ஐபிஎல் அணிகள் விரைவில் இந்திய பயிற்சியாளர்களின் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்று விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் தான் இன்று ஃபிளெமிங் தலைமையிலான சென்னை அணியும், பதானி தலைமையிலான டெல்லி அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த இருவரின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விக்கு பதலளித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின், “ஒரு தலைமை பயிற்சியாளருக்கு நிறைய விசயங்களும், பொறுப்புகளும் இருக்கின்றன. தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும், ஒரு கேப்டன் இருந்தால் அவரை சுற்றி ஒரு அணியை கட்டமைக்க வேண்டும்.களத்தில் என்ன செய்யவேண்டும் என்ற திட்டமிடல், பவுலரோட எண்ட்ரி பாய்ண்ட் எப்படி இருக்கவேண்டும், பேட்ஸ்மேனின் எண்ட்ரி பாய்ண்ட் எப்படி இருக்கவேண்டும் என நிறைய செயல்முறைகள் இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானது ஸ்குவாடை தேர்வுசெய்வது. ஏலத்தில் ஸ்குவாடை தேர்வுசெய்வதிலேயே பாதி வேலை முடிந்துவிடும், ஒரு வீரரை தேர்வுசெய்தால் அவருக்கான பேக்கப் வீரரை தேர்வுசெய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னை அணியில் மேட் ஹென்றிக்கு மாற்றுவீரராக ஃபோக்ஸ், இது சரியான பேக்கப் வீரர் கிடையாது.
இரண்டு தலைமை பயிற்சியாளர்களில் யார் சிறந்தவர்கள் என்ற விசயத்திற்கு நான் போகவில்லை, ஆனால் இது இத்தனை ஆண்டுகள் சென்னை அணிக்காக பயிற்சியாளராக இருக்கும் பேட்டைக்காரனுக்கும், TNPL-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு பல டைட்டில்களை அடித்த OG சேப்பாக்காரனுக்கும் இடையேயான மோதலாக இருக்கப்போகிறது.இந்த மோதலில் பதானியின் கைகளே ஓங்கி இருக்கிறது என நினைக்கிறேன்" என பேசியுள்ளார்.

