”தோனிக்கே நம்பிக்கை வரவில்லை” - விளையாடுவது எப்போது? கோச் சொல்வது என்ன?
தோனி, வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும், அவரை உடனடியாக ஆடுகளத்தில் இறக்க அணி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ”ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தோனிக்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை” என அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
19ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நடப்புத் தொடரில், சென்னை அணியில் தல தோனி எப்போது களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சீசனின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, தோனி தனது கால் தசைப்பிடிப்பிலிருந்து சிகிச்சை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் இன்றுவரை களமிறங்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும், அவரை உடனடியாக ஆடுகளத்தில் இறக்க அணி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ”ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தோனிக்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை” என அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தோனி எப்போது களமிறங்குவார் என்பது எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. அவர் காயத்திலிருந்து மிகச் சிறப்பாக மீண்டு வருகிறார். வலைப்பயிற்சியில் அவரது பேட்டிங் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஆனால், பேட்டிங்கை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ஒரு பினிஷராக அவர் களமிறங்கும்போது, 1 அல்லது 2 ரன்களை மிக வேகமாக ஓடி எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தற்போது விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதில்தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். வேகமாக ஓடுவதில் அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. அவர் அந்த நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆடும் லெவனில் இணைவார். ரசிகர்களைப் போலவே நானும் அவரது வருகைக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

