தொடருக்கு இடையே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தது ஏன்? ஓர் பார்வை!
செய்தியாளர்: சந்தான குமார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக சிறந்த ஸ்பின்னர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள நபர் ரவிச்சந்தரன் அஸ்வின். இவரின் ஓய்வு என்பது கடந்த 2023ஆம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. காரணம், 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து அவர் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதி உற்று வருகிறார்.
இருப்பினும் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி தன்னுடைய பந்து வீச்சில் மாற்றம் செய்து அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில்தான் இந்தியா ஆஸ்திரேலியா தொடருக்கு பின் மீண்டும் டெஸ்ட் போட்டி நடைபெற 6 மாதம் இருப்பதால் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படும் முன்பே “சர்வதேச போட்டிகளில் இதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும்” என அஸ்வின் கூறியுள்ளார். முதலில் இதை தன்னுடைய குடும்பத்திடம் கூறிய அஸ்வின், எப்போது என கூறவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவில் “தொடர் செல்வது குறித்து முடிவு எடுக்க உள்ளேன்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து பெர்த் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தன்னுடைய ஓய்வு குறித்து பேசி உள்ளார். அப்போது ரோகித் சர்மா அஸ்வினை தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதன்பின்பே, இது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி உள்ளார். இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் ஜடேஜாவை அணி நிர்வாகம் தேர்வு செய்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியுடன் உடன் ஓய்வு பெற முடிவு செய்த அஸ்வின் நேற்று இரவு தன்னுடைய குடும்பத்தினரை தொடர்புகொண்டு நாளை தான் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய கடைசி நாள் என கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று இரவு முதல் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடமும் தனி தனியாக அஸ்வின் பேசியுள்ளார்.
அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். பிசிசி தரப்பிலும் அஸ்வின் தரப்பிலும் இதற்கு, “முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் இந்திய அணி அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து செல்வதை உணர்ந்ததன் காரணமாகவும்தான், தொடருக்கு மத்தியில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். இந்திய அணிக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை” என்று தெரிவிக்கப்படுகிறது.