மேக்ஸ்வெல் to கில்.. மைதானத்தில் சுருண்டு விழும் வீரர்கள்.. தசைப்பிடிப்பு பிரச்னைகள் ஏற்படுவது ஏன்?

நடப்பு உலகக்கோப்பை தொடரில் வீர்ரகளுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதென்பது சாதரணமாகிவிட்டது. மேக்ஸ்வெல், கில், விராட், க்ளாசன், ஸ்ரேயாஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.
பாதிக்கப்பட்ட வீரர்கள்
பாதிக்கப்பட்ட வீரர்கள்pt web

உலகக்கோப்பைத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 397 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்களைக் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடக்கம். நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 70 பந்துகளில் 105 ரன்களைக் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடக்கம்.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்களை மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் முகம்மது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலிக்கு திடீரென தசைப் பிடிப்பு ஏற்பட்டது. முன்னதாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கில்-க்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 23 ஆவது ஓவரில் அவர் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்திலேயே மீண்டும் களமிறங்கினார்

அதே ஆட்டத்திலேயே நியூசிலாந்து அணியின் மிட்செலுக்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்திய அணியின் இஷான் கிஷன் அவருக்கு உதவி செய்த காணொளி இணையத்தில் வைரலானது. அதேபோல், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லுக்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் மைதானத்திலேயே துடிதுடித்தார். ரன்கள் ஓட முடியாமல் தவித்தார். ஆனாலும் இறுதிக்கட்டம் வரை போராடி ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார் மேக்ஸ்வெல். நெதர்லாந்து அணியுடனான போட்டியின் போது தனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும் மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும் ஸ்ரேயாஸ் ஐயரும் தெரிவித்திருந்தார்.

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்?

தசைப்பிடிப்பு என்பது திடீரென நடம்புகள் இழுத்து பிடித்தார் போல் ஆவது. சுள்ளீரென்று வலி அப்பொழுது ஏற்படும். சிறிது நேரம் நம்மால் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

வெப்பநிலை..!

கிரிக்கெட் உலகக்கோப்பையில் வீரர்களுக்கு அடிக்கடி இதுபோன்று நிகழ்வது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற சூடான தட்பவெட்ப நிலைகளில் விளையாடுவதையும் ஒரு காரணமாக சிலர் குறிப்பிடுகின்றனர். வெளிநாட்டு வீரர்களுக்கு இதுபோல் ஏற்படுவது ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக எடுத்துக் கொண்டாலும் இந்திய வீரர்களுக்கும் இது போன்று ஏற்படுவது ஆச்சரியமே..

நிபுணர்கள் கூறுவது என்னவெனில், வீரர்கள் நெடுநேரம் களத்தில் இருக்கும் போது அவர்களுக்கு நீர்ச்சத்து குறைவதாலும், உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருந்தாலும், அதிக உடலுழைப்பை செலுத்தும் போதும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்கின்றனர். அதிக உடலுழைப்பை செலுத்தும் போது அவர்களுக்கு வியர்வை அதிகளவில் ஏற்படும். உடல் சூட்டை குறைக்க வியர்வை வெளிப்படும் போது உடல் அதிகளவில் நீரை இழந்திருக்கும் இதன் காரணமாகவும் தசைப்பிடிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர். அதனால் தான் ஆட்டத்தின் போது நீர் சத்து ஆகாரங்களை சீரான இடைவெளியில் வீரர்கள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து திடீரென விளையாடினால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் தான் முறையான வாம் அப் பயிற்சிகளை வீரர்கள் எடுத்துக் கொள்வதுண்டு. விளையாட்டிற்கு முன்பாகவும், விளையாட்டிற்கு பிறகும் பயிற்சிகள் எடுத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. மேக்ஸ்வெல் கூறும் போது முறையான உடல் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளாததை குறிப்பிட்டிருந்தார். கிரிக்கெட் மட்டுமல்லாது டென்னிஸ் உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளுக்கும் பொருந்தும். வியர்வை வெளியேற விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com