”சின்னசாமி எனது இரண்டாவது வீடு” - மைதானத்திற்கு கும்ப்ளே, டிராவிட் பெயர்களில் ஸ்டாண்டு!
கர்நாடக மாநிலம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தனது பெயர் பொறித்த ஸ்டாண்டு வைத்தது குறித்து இந்திய ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உருக்கமாகப் பேசியுள்ளனர்.
கிரிக்கெட் மைதானங்களில் உள்ள ஸ்டாண்டுகளில், ஓய்வு பெற்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. அவர்களுடைய வளர்ச்சிக்கு அந்த மைதானத்தின் பங்கும் அடங்குவதால், அவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் அனில் கும்பளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அவர்களது பெயர்களில் இன்று ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன. இந்திய அணியை வழிநடத்தியதற்கும் மாநில கிரிக்கெட்டை உயர்த்தியதற்கும் அவர்களது பெயர்களை பெங்களூரு சின்னசாமி மைதான ஸ்டாண்டுகளில் சூட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கெளரவித்துள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக கும்ப்ளே அறியப்படுகிறார். கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என அறியப்படும் ராகுல் டிராவிட் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனிப்பெரும் சாதனைகள் படைத்தவர். தவிர, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்தவர் டிராவிட்தான். அவர் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோதுதான் அந்த அணி உலகக் கோப்பையை வென்றது.
ஸ்டாண்டில் பெயர் வைக்கப்பட்டது குறித்துப் பேசிய ராகுல் டிராவிட், “இது, எனக்கு இரண்டாவது வீடாக இருந்தது. அனில் சொன்னதுபோல், எங்கள் வீடுகளில் செலவிட்டதைவிட அதிக நேரம் இங்கே செலவிட்டோம். இது மிகுந்த மகிழ்ச்சியின் இடமாகவும், சில சமயங்களில் மிகுந்த ஏமாற்றத்தின் இடமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் இன்று நான் இருக்கும் அனைத்தையும் உண்மையிலேயே எனக்குக் கொடுத்த இடம் இதுதான்” என உணர்ச்சிபொங்கப் பேசினார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே, “உண்மையில் யாருடைய பெயர் எந்த ஸ்டாண்டில் உள்ளது என்பது முக்கியமல்ல. அனைத்து பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டு இப்போது மைதானத்தில் நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளன என்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. கர்நாடக கிரிக்கெட்டின் எழுச்சி எப்போதும் ஒரு பகிரப்பட்ட பயணமாகவே இருந்து வருகிறது”எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 ரசிகர்கள் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, மாநில அரசு மீது ஆர்சிபி நிர்வாகத்தின் மீதும், மைதானத்தின் மீதும் நடவடிக்கை எடுத்தது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான குழு, இதுதொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்த நிலையில், மீண்டும் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

