கேரம் உலகக் கோப்பை: 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை!
7ஆவது கேரம் உலகக்கோப்பை போட்டியில், மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
மாலத்தீவில் 7ஆவது கேரம் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் இடம்பெற்றனர். இதில் மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா. மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா, இந்தியாவின் மற்றொரு வீரங்கனையான காஜல் குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் கீர்த்தனா - காஜல் குமாரி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான மித்ரா - காசிமாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதேபோல கீர்த்தனா உட்பட 4 பேர் கொண்ட மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி மாலத்தீவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களும், காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களும் வென்றனர். கடந்த உலகக்கோப்பை போட்டியில் காசிமா, ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

