சர்வதேச கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்.. சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சதாசிவம் என்பவரது மகன் சரண்குமார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றார்.
இந்நிலையில், நேபாளத்தில் உள்ள கோக்ரா பகுதியில் நடைபெற்ற இந்தோ- நேபாள (Indo - Nepal) சர்வதேச கேரம் போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட 240 வீரர்களுடன் சரண்குமாரும் பங்கேற்றிருந்தார். கேரம் இரட்டையர்கள் பிரிவு போட்டியில், மேலூரைச் சேர்ந்த சரண்குமார் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தங்க பதக்கம் வென்றனர்.
சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு..
இதனைத்தொடர்ந்து, இன்று சொந்த ஊரான மேலூருக்கு திரும்பிய விளையாட்டு வீரர் சரண்குமாருக்கு, பொதுமக்கள், நண்பர்கள், சக விளையாட்டு வீரர்கள் அனைவரும் தேசியக் கொடி ஏந்தி, பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து ஊர்வலமாக் அழைத்து வந்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தங்கம் வென்றது குறித்து விளையாட்டு வீரர் சரண்குமார் பேசுகையில், நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபால், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் சார்பில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் கலந்துக் கொண்டு தங்க பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. தந்தையுடன் சேர்ந்து இளம் வயதில் பயிற்சியை துவங்கினேன். அடுத்து பஞ்சாபில் ஃபெடரேஷன் கப் நடைபெற உள்ளது. அதிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். அடுத்து ஒலிம்பிக்கிலும் பங்கேற்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தார்.