”5வது நாளிலும் சிராஜ் எப்படி இவ்ளோ ஆற்றலுடன் வீசினார்” - DK-விடம் வியந்து சொன்ன மெக்கல்லம்!
2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பல்வேறு வீரர்கள் ஒவ்வொரு டெஸ்ட்டின் கதாநாயகர்களாக ஜொலித்தார்கள். ஆனால் தொடர் முழுவதும் 25 நாட்கள் பந்துவீசிய ஒரே பவுலராக இருந்த முகமது சிராஜ், தொடரின் இறுதிநாளில் எல்லோருடைய மனதையும் வென்றெடுத்தார்.
’நம்பிக்கை’ என்ற ஒற்றை வார்த்தையை மூச்சாக பிடித்துக்கொண்டு இறுதிநாளிலும் 136 கிமீ/மணி வேகத்தில் பந்துவீசிய சிராஜ், தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை தனியாளாக மீட்டு எடுத்துவந்தார்.
எப்படியும் இங்கிலாந்துதான் வெல்லப்போகிறது என்ற நிலையே இருந்தபோது, கடைசி 40 நிமிடங்களில் ஒட்டுமொத்த இங்கிலாந்தையும் ஆச்சரியப்படுத்தினார் சிராஜ். தனி ஒருவனாக போராடிய சிராஜின் போராட்டம் 2-2 என தொடரை சமன்செய்ய இந்தியாவிற்கு வழிவகுத்து கொடுத்தது.
‘இது எப்படி சாத்தியமானது, எப்படி அவரால் ஒவ்வொரு பந்திற்கும் இப்படி ஆற்றலை கொடுக்கமுடிகிறது” என வியந்துபோன இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், கடைசி 40 நிமிடங்களில் முகமது சிராஜுக்கு தொடர் நாயகன் விருதை கொடுக்க விரும்பியுள்ளார்.
தொடர் நாயகனாக சிராஜை தேர்வுசெய்ய விரும்பினார் மெக்கல்லம்..
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 1-2 என பின் தங்கியிருந்த இந்திய அணி, 5வது டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமன்செய்தது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய முகமது சிராஜ் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதி 40 நிமிடங்களில் சிராஜ் வீசிய அற்புதமான பந்துவீச்சு, இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமை கவர்ந்தது. அவர் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் விருதை முகமது சிராஜுக்கு வழங்கவே ஆசைப்பட்டார் என்று தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், “போட்டி 4வது நாளில் முடிந்தால், சுப்மன் கில்லுக்கு தொடர் நாயகன் விருது வழங்கவே முடிவுசெய்திருந்தனர். இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் 5வது டெஸ்ட் போட்டியின்போது தொடரின் ஒருங்கிணைப்பாளரிடம் பேசியிருந்தார். அதுவரை சுப்மன் கில் குவித்த ரன்கள் அவரை தேர்வுசெய்ய வைத்தது.
ஆனால் 5வது நாளின் இறுதி 40 நிமிடங்களை பார்த்த மெக்கல்லம், சிராஜின் பந்துவீச்சை ரசித்தார். எப்படி அவரால் ஒவ்வொரு பந்திற்கும் ஆற்றலை கொடுக்க முடிகிறது, ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் இருக்கவேண்டிய உத்வேகம் அவரிடம் இருக்கிறது, பந்திற்கு கொடுக்கும் ஆற்றல் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை சிராஜ் மூலம் நாம் பார்த்தோம். ஒரு தொடரை மாற்றக்கூடிய மந்திரங்களில் இதுவும் ஒன்று, இன்று, அது உண்மையில் செய்தது” என்று மெக்கல்லம் கூறியதாக தினேஷ் கார்த்திக் பேசினார்.