புவனேஷ்வருக்கு 'T20-ல் எப்படி ஆதிக்கம் செலுத்துவது' என்று தெரியும்! - ஸ்ரேயாஸ் ஐயர்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது அனுபவம் பந்துவீச்சில் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். டி20 வடிவத்தில் புவனேஷ்வர் குமாரின் ஆதிக்கம் அணிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4ஆம் தேதியோடு முடிந்த நிலையில், விவிஎஸ் லக்ஸ்மன், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை தேர்வுசெய்தது. அந்த அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்த செய்தி இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பும்ராவை தவிர வேறு எந்த பவுலர்களிடமும் அனுபவம் இல்லாததால் இந்திய அணி பந்துவீச்சில் சுமாரான ஒரு அணியாகவே வலம்வருகிறது. இதனால் புவனேஷ்வர் குமாரின் வருகை இந்திய அணிக்கு பெரிய பலம் சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார். இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக புவனேஷ்வர் குமார் கம்பேக் குறித்து பேசியிருக்கும் இந்திய டி20 அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “புவி நிச்சயமாக அணிக்கு மிகுந்த அனுபவத்தைக் கொண்டு வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடருக்குப் பிறகு, அந்த அனுபவம் எங்களிடம் சற்று குறைவாக இருந்தது. எங்களிடம் நிறைய புதிய பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் டி20-யில், அவருடைய விளையாட்டு வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். எனவே, இந்த வடிவத்தில் எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.
அதேபோல சூர்யவன்ஷி ஆடும் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பேசிய அவர், “அவரைப் போன்ற ஒரு திறமைசாலி ஆடை மாற்றும் அறையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். அவர் மிகவும் இளம் வயதுடையவர். வாய்ப்பு பெறுவதற்கு அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. அவர் உடனடியாக வந்து அணியில் இணைந்துவிட முடியாது, ஏனென்றால் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள், மேலும் அவர்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளனர்" என பேசியுள்ளார்.

