பொல்லார்டு செய்தது துரோகம்? கண்டிப்பாக தண்டனை வேண்டும்! CSK-MI ரசிகர்கள் மோதல்! முன்.வீரர் கருத்து!
SA20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பொல்லார்டு, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து பின்னர் விலகியதால், அவரது நடவடிக்கை துரோகம் என விமர்சனம் எழுந்துள்ளது. ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் வீரர்களின் கடமைகள் குறித்து விவாதம் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி தலையிட்டு விதிமுறைகள் அமைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SA20 தொடரில் 2 சீசன்கள் மும்பை இந்தியன்ஸின் கேப் டவுன் அணியில் விளையாடிய கீரன் பொல்லார்டு, 2027 சீசனுக்கு முன்னதாக அவ்வணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்றார். ஏலத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பொல்லார்டை 1.5 மில்லியன் ராண்ட் அடிப்படை விலைக்கு வாங்கியது. அது இந்திய மதிப்பில் 87 லட்சம் ரூபாயாகும். இதனால் எப்போதும் நீலநிற ஜெர்சியில் மும்பைக்காக விளையாடும் கீரன் பொல்லார்டு முதல்முறையாக மஞ்சள் நிறைய ஜெர்சியில் சூப்பர் கிங்ஸுக்காக விளையாட போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல்லுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்பிற்கு சில நேரங்களிலேயே ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் உடனான ஒப்பந்தத்தில் இருந்து பொல்லார்டு விலகியதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் தான் பொல்லார்டு செய்தது துரோகம் என்றும், ஏலத்தில் பங்கேற்க பெயர் கொடுக்கப்பட்டது முதல் பின்னர் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றது வரை, அதற்கும் மேல் ஏலத்திலும் எம்ஐ அவரை எடுக்க ஆர்வம் காட்டாதது என இவ்வளவும் நடந்தபிறகு திடீரென மும்பை நிர்வாகம் அழைத்ததும் பொல்லார்டு எப்படி செல்லமுடியும் என்றும் அவர் செய்தது துரோகம் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் வீரர்களின் கடமைகள் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. கடைசி நேரத்தில் வீரர்கள் விலகுவதை தடுக்க அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது ஐசிசி தலையிட்டு ஒரு செண்ட்ரல் காண்ட்ராக்ட் ஒன்றை போட வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒருபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பொல்லார்டை விமர்சனம் செய்ய, மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றன.
இதற்கிடையில் முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடைசிநேரத்தில் விலகும் வீரர்களுக்கு பெரும் நிதி அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வீரர்களை ஒரு லீக்கிலிருந்து மற்ற லீக்கிற்கு மாற்ற வழிவகுக்கும் ஏஜண்ட்களுக்கும் அதே அளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும், அதுமட்டுமே இப்படியான விசயங்கள் நடப்பதை தடுக்கும் என்றும் அஸ்வின் பேசியுள்ளார். அதேபோல முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் டி20 லீக் தொடரில் ஒப்பந்தக் கடமைகள் மற்றும் ஏற்படக்கூடிய நலன்-முரண்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு எதிர்காலத்தில் ஒரு விதிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வைக்கப்படுகிறது.

