35 பந்தில் சதமடித்த அபிஷேக் சர்மா.. 30 பந்தில் ஏன் அடிக்கல? யுவராஜ் சிங் பதிவு!
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்தில் சதமடித்து இந்திய அணிக்கு சாதனை வெற்றியை பெற்றுத்தந்தார். யுவராஜ் சிங், 30 பந்தில் சதமடிக்க முடியாததைக் குறிப்பிட்டு, அபிஷேக்கின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஒரு பேட்டிங் ருத்ரதாண்டவமே ஆடினார். இந்த ஒரே போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் இந்திய அணி பல்வேறு உலகசாதனைகளை தகர்த்தன. இந்தசூழலில் 35 பந்தில் அபிஷேக் சர்மா சதமடித்தபோதும் ஏன் 30 பந்தில் அடிக்கமுடியவில்லை என்று யுவராஜ் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.
199 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மா மற்றும் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். எப்போதும் முதல் பந்திலிருந்தே அடிக்கும் சூர்யவன்ஷியை நிற்கவைத்துவிட்டு அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். 5 புண்டரிகள் 6 சிக்சர்கள் என சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 15 பந்தில் அரைசதம் அடித்ததோடு 35 பந்தில் சதமடித்து அசத்தினார்.
அபிஷேக் சர்மாவின் அதிரடியால் இந்தியா 5 ஓவர்கள் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்ததோடு, பவர்பிளேவான 6 ஓவரில் 118 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது.
இந்தசூழலில் தான் 35 பந்தில் சதமடித்து ஒரு தலைசிறந்த ஆட்டத்தை ஆடியபோதும், அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குருவான யுவராஜ் சிங் ஏன் 30 பந்தில் சதமடிக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் யுவராஜ் சிங், “இருந்தாலும் 30 அல்லது 34 பந்துகளில் 100 ரன்கள் எடுக்க முடியவில்லை. அருமையாக விளையாடினீர்கள் அபிஷேக் சார், சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. மறுமுனையில் பேரழிவுக்கு வழிவகுத்த சூர்யவன்ஷியின் ஆட்டம், அணிக்காக தன்னுடைய இடத்தை தியாகம் செய்த டீம் மேன் சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துக்கள். நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி ஸ்கோரை 200-க்குள் கட்டுப்படுத்தினர். இந்தியாவிற்கு சிறப்பான தொடர் வெற்றி, வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
ஒரு நேரத்தில் 28 பந்துகளில் சதமடிக்கும் வாய்ப்பு அபிஷேக் சர்மாவிற்கு இருந்தது, ஆனால் மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக பந்துவீசி அதை தடுத்து நிறுத்தினார்.

