HEART BREAKING| ’சோகத்தில் முடிந்த ஜடேஜா போராட்டம்..’ சொதப்பிய டாப் ஆர்டர் வீரர்கள்.. ENG வெற்றி!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.
தனியாளாக போராடிய ஜடேஜா.. UnLucky சிராஜ்!
இங்கிலாந்து மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்ததால், இரண்டாவது இன்னிங்ஸ் மீது சுவாரசியம் கூடியது. அதற்கேற்றார் போல் இங்கிலாந்தை 192 ரன்னில் சுருட்டிய இந்திய அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
193 ரன்கள் தானே எளிதாக இந்தியா வென்றுவிடும் என நினைத்தபோது, 4வது நாளின் கடைசி நேரத்தில் 58 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
5வது நாளில் இந்தியா வெற்றிபெற 135 ரன்களும், இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவையாக இருந்தன. ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தாலே இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தபோது, ரிஷப் பண்ட்டை போல்டாக்கி வெளியேற்றிய ஆர்ச்சர் இந்தியாவின் சரிவிற்கு அடித்தளம் போட்டார். பண்ட்டை தொடர்ந்து கேஎல் ராகுலும் வெளியேற, அதற்கு பிறகு வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெளியேறினர்.
8 விக்கெட்டுகளை இந்தியா இழந்த போது வெற்றிக்கு 81 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது பொறுப்பை தனதாக்கி கொண்ட ஜடேஜா, பும்ராவுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். எல்லாம் சரியாக சென்றபோது அடித்துஆட முயற்சித்த பும்ரா சொதப்பிவிட்டு வெளியேறினார். அதற்குபிறகு 11வது வீரராக களமிறங்கிய சிராஜ் உடனும் பார்ட்னர்ஷிப் போட்ட ஜடேஜா, வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலைக்கே அணியை எடுத்துவந்தார்.
20 ரன்களுக்கு கீழ் சென்றுவிட்டால் இங்கிலாந்து மீது அழுத்தம் அதிகரிக்கும், அதற்குபிறகு ஒரு பவுண்டரி வந்தாலே ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக மாறும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக பஷீர் வீசிய பந்தை சிராஜ் நன்றாக தடுத்து ஆடியபோதும் பந்து நேராக சென்று ஸ்டம்பை தாக்கி பெய்ல்ஸ் கீழேவிழுந்தது. இதனால் அரைசதமடித்து போராடிய ஜடேஜாவின் போராட்டம் வீணானது.
3வது டெஸ்ட் போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.