புதிய ஸ்பான்சரைத் தேடும் பிசிசிஐ.. விதிகள் என்னென்ன.. போட்டியிடும் நிறுவனங்கள் எவை?
ட்ரீம் 11 விலகியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கான அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஸ்பான்சரில் இருந்து விலகிய ட்ரீம் 11
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக பிரபல ஆன்லைன் சூதாட்டச் செயலியான ட்ரீம் 11 நிறுவனம் இருந்து வந்தது. அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டச் செயலிகள் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததால், ட்ரீம் 11 நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. செயலி முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியது.
அதாவது 2023ஆம் ஆண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடிக்கு ட்ரீம் 11 உடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக தற்போது அந்த ஒப்பந்தத்திலிருந்து முன்கூட்டியே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் ட்ரீம் 11 விலகியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தீவிரமாக தேடி வருகிறது. இதற்கான அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16 கடைசி நாள் ஆகும்.
கடுமையான விதிமுறைகளை விதித்த பிசிசிஐ
இதற்கிடையே, செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பையில், இந்திய அணி ஸ்பான்சர் பெயர் இல்லாத ஜெர்சியுடன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. காரணம், ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு மட்டும், தனியாக ஒரு ஸ்பான்சரை நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை. அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கான போட்டிகளையும் அது கருத்தில் கொண்டுள்ளது.
மறுபுறம், முந்தைய ஸ்பான்சர்கள் சர்ச்சையில் சிக்கியதால், இம்முறை கடுமையான விதிமுறைகளை பிசிசிஐ விதித்துள்ளது.
ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்றவை.
தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளில் ரூ.300 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஜெர்சி ஸ்பான்சராக விண்ணப்பிக்க முடியும்.
ஸ்பான்சர்ஷிப் பெறும் நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்டம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.
கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள், மதுபான உற்பத்தியாளர்கள், ஆபாச வலைத்தளங்கள், புகையிலை நிறுவனங்கள் ஆகியவையும் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியற்றவை.
அதேபோல், விளையாட்டு மற்றும் அதுசார்ந்த ஆடை உற்பத்தியாளர்கள், வங்கிகள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்; மின்விசிறிகள், மிக்சர் கிரைண்டர்கள் மற்றும் பாதுகாப்பு பூட்டுகள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட நிறுவனங்களும் விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பிராண்ட் பிரிவுகளுக்குள் ஏற்கெனவே BCCI ஸ்பான்சர்களைக் கொண்டிருப்பதால், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியேறிய ஸ்பான்சர்கள்.. காரணம் என்ன?
விதிமுறைகள் இப்படியிருக்க, மறுபுறம் இந்திய அணியின் ஸ்பான்சர்கள் அதிலிருந்து விலகுவதும், வெளியேற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. 2001 முதல், ஒவ்வொரு பெரிய ஜெர்சி ஸ்பான்சரும் சட்டம், நிதி மற்றும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக வெளியேறியுள்ளன.
சஹாரா (2001–2012): அதன் நிறுவனருக்கு ஏற்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் சட்டச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியேறியது.
ஸ்டார் இந்தியா (2014–2017): ஒளிபரப்பு ஜாம்பவானான ஸ்டார் இந்தியா, அதன் ஆதிக்கத்தை அரித்த நம்பிக்கைக்கு எதிரான விசாரணைகள் மற்றும் நிதி அழுத்தங்களில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து வெளியேறியது.
ஓப்போ (2017–2020): மோசமான வருமானம் மற்றும் இந்தியா - சீனா புவிசார் அரசியல் பதற்றங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டது.
பைஜூஸ் (2020–2022): ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கல்வி தொழில்நுட்ப யூனிகார்னாக இருந்த பைஜூஸ், ஜெர்சியையும், ஃபிஃபா ஸ்பான்சர்ஷிப்களையும் கூடக் கைப்பற்றியது. ஆனால் கடன், மோசடி மற்றும் திவால் நிலையால் வெளியேற்றப்பட்டது.
ட்ரீம் 11 (2023–2025): புதிய ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டது.
பிசிசிஐக்கு ஸ்பான்சர்ஷிப் ஏன் முக்கியம்?
உலகளவில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மதிப்புமிக்கதாகப் கருதப்படுகிறது. ஒவ்வொரு போட்டியின்போதும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது. அதனால், பிராண்டுகளைப் பொறுத்தவரை, ஜெர்சி ஒப்பிடமுடியாத வெளிப்பாட்டை வழங்குகிறது. மேலும், கிரிக்கெட்டின் உலகளாவிய வருவாயில் 80%க்கும் அதிகமானவை இந்தியாவிலிருந்து வருகிறது. மேலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகளுடன் மூன்று வருட சுழற்சி இணைந்திருப்பதால், தற்போதைய ஏலம் மிகவும் பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் BCCI-க்கு, இந்த ஒப்பந்தம் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் ஏற்கெனவே கிடைத்துவரும் மிகப்பெரிய வருமானத்தில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. தவிர, அது விளையாட்டின் நிதி இயந்திரத்தையும் உற்சாகமாக வைத்திருக்கிறது.
போட்டியில் குதிப்பவர்கள் யார்?
இந்தியாவின் கிரிக்கெட் பொருளாதாரம் ஒழுங்குமுறை மற்றும் மாறிவரும் அரசியல் ஆகியவற்றுடன் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. ஆகையால், பிசிசிஐ விதித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்றபடி, முன்னணியில் பல இந்திய நிறுவனங்கள் இருந்தாலும், அவை எல்லாம் போட்டியிடாது எனக் கூறப்படுகிறது. காரணம், அந்த நிறுவனங்கள் பழைய ஸ்பான்சர்களின் வெளியேற்றம் குறித்த நடவடிக்கையைக் கட்டாயம் ஆராய்வதில் கவனம் செலுத்தும். அதேநேரத்தில் உலகளவில் தனது வணிகத் தளங்களைக் கால் பதித்து வரும் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பந்தயத்தில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இது தவிர அமேசான், பிளிப்கார்ட் அல்லது பேடிஎம் போன்ற நுகர்வோர் பிராண்டுகளும் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில கார் தயாரிக்கும் நிறுவனங்களும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.