மந்தனாவுக்கு கேப்டன் பதவி.. தோனி - கோலி ஃபார்முலா.. பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்!
இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்கும் ஸ்மிருதி மந்தனாவிற்கு, எம்.எஸ்.தோனி தனது ஆரம்ப நாட்களில் விராட் கோலிக்கு வழிகாட்டியதுபோல, ஹர்மன்பிரீத் கவுர் வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனான பல ஆண்டுக்காலம் பவனிவந்த ஹர்மன்ப்ரீத் கவுர், தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவியதைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் அப்பொறுப்பிலிருந்து விடைபெற்றார். கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினாலும் ஒரு வீரராக இந்திய அணியில் விளையாடவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியதைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்கும் ஸ்மிருதி மந்தனாவிற்கு, எம்.எஸ்.தோனி தனது ஆரம்ப நாட்களில் விராட் கோலிக்கு வழிகாட்டியதுபோல, ஹர்மன்பிரீத் கவுர் வழிகாட்ட வேண்டும் என பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், “அணியில் ஒரு மூத்த வீரர் இருக்கும் பட்சத்தில், கேப்டன் பொறுப்பு எப்போதும் அடுத்த கேப்டனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஒருவரை வழிநடத்த மூத்தவர் ஒருவர் இருக்கும்போதுதான் தலைமைப் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து அவர், “ஏனென்றால், நீங்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், கேப்டன் பதவி எளிதானதல்ல. தோனி பொறுப்பேற்றபோது, அவருக்கு உதவ சௌரவ் கங்குலி இருந்தார். பின்னர் எம்.எஸ். தோனி கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்தபோது, விராட் கோலி அப்பொறுப்பை ஏற்கத் தயாராக இருந்தார். அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகும், தோனி அந்தப் பொறுப்பில் கோலிக்கு வழிகாட்டியாகத் தொடர்ந்தார்.
கள அமைப்புகள், டி.ஆர்.எஸ் முடிவுகள் மற்றும் பந்துவீச்சாளர்களைக் கொண்டுவருவது போன்றவற்றில் அவருக்கு அடிக்கடி உதவினார். பெண்கள் அணியின் கேப்டன் பதவி மாற்றத்திலும் இதே போன்ற ஒரு போக்கையே பிசிசிஐ விரும்புகிறது. மந்தனா சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும்போது, ஹர்மன்பிரீத் ஒரு வரப்பிரசாதமாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்” என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

