”வங்கதேசம் இந்தியா வராததற்கு காரணம் பாகிஸ்தான்..” - பிசிசிஐ தரப்பில் குற்றச்சாட்டு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது.
அதை பரிசீலனை செய்த ஐசிசி பாதுகாப்பு ஆலோசனைக் குழு மூலம் ஆய்வுநடத்தி, இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரச்னை இல்லையென்றும், வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குபதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தசூழலில் வங்கதேசம் இந்தியாவிற்கு வரமாட்டோம் என முடிவெடுத்ததற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் வங்கதேசத்தை தூண்டிவிடுகிறது..
2026 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "வங்கதேசம் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், முழு பாதுகாப்பையும் உறுதி செய்தோம், ஆனால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததால், கடைசி நேரத்தில் முழு அட்டவணையையும் மாற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து கொண்டு வரப்பட்டது” என்று கூறினார்.
மேலும், "பாகிஸ்தான் எந்த காரணமும் இல்லாமல் இந்த விஷயத்தில் தலையிட்டு வங்கதேசத்தைத் தூண்டிவிடுகிறது. வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் செய்த கொடூரம் அனைவருக்கும் தெரியும், இப்போது பாகிஸ்தான் வங்கதேசத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள், இது முற்றிலும் தவறு” என பேசியுள்ளார்.

