இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மோதி வருகின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் ரசிகர்களுக்கு பெரிய ஆர்வத்தை கொடுத்தாலும் வெற்றியை பொறுத்தவரை அது இந்தியா பக்கம் மட்டுமே உள்ளது. இதுவரை 7 முறை இந்த இரண்டு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ள நிலையில் 7 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை தங்களின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா போட்டி, டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி என இரண்டு போட்டிகளுக்கும் மைதானம் நிரம்பவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி ஒரு வாரம் ஆகியும் தற்போது வரை பெரிய அளவில் அதன் மீது மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ள நிலையில்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்கள் பார்வையும் அகமதாபாத் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக உலக கிரிக்கெட் அரங்கில் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளதால் இந்த போட்டியின் மூலமாவது உலக கோப்பையை உயிர் பெற வைக்க வேண்டும் என பிசிசிஐ மற்றும் ஐசிசி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக கோப்பை தொடரின் துவக்க விழாவில் நடைபெற வேண்டிய கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என திரைக்கலைஞர்களை அழைப்பது மறுபக்கம் என பல விதங்களில் இந்த போட்டி குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 86 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 55 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 29 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி டிரா ஆன நிலையில் மற்றொரு போட்டிக்கு முடிவில்லை. இந்திய அணியின் வெற்றி சதவீதம் என்பது 65.29% ஆக உள்ளது.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை 81 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் 47 போட்டிகளில் வெற்றியும், 32 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இரண்டு போட்டிகளுக்கு முடிவில்லை. பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 59.49% ஆக உள்ளது.