‘நீங்கள் Social Media-ல் மட்டுமே சிறந்த வீரர்..’ பாபர் அசாமை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்!
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது முன்னாள் வீரர் பாசித் அலி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் சதம் இல்லாமல், கடின சூழலில் தோல்வியடைந்த பாபர், ரசிகர்களின் கண்களில் மட்டும் ‘சோஷியல் மீடியா வீரர்’ எனக் காட்சியளிக்கிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக பாபர் அசாம் விளையாடாத நிலையில், இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் கேப்டனாக வழிநடத்திய நிலையில், பாகிஸ்தான் கம்பேக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் டெஸ்ட்டை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 110 மற்றும் 194 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இதில் மோசமான ஷாட்களை விளையாடிய பாபர் அசாம் 8 மற்றும் 6 ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் இங்கிலாந்து தொடரை சீல் செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை வெறும் சோஷியல் மீடியா வீரர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் பாசித் அலி.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “அவர்கள் சாதாரணமாக சிறந்த வீரர்களாகிவிடவில்லை. நான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றிப் பேசவில்லை . என் நாட்டைச் சேர்ந்த வீரரைப் பற்றிப் பேசுகிறேன். கடினமான சூழலில் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால், அதில் என்ன பயன் உள்ளது? ஆனால் உங்கள் ரசிகர் பட்டாளத்தை பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறந்த வீரர். சமூக ஊடகங்களின் முன் மட்டுமே நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருக்கிறீர்கள்.
நீங்கள் எப்போது அதைச் செய்யப் போகிறீர்கள்? நான் பாபர் அசாமை பற்றித்தான் பேசுகிறேன். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்கவில்லை. எப்போது அதைச் செய்வீர்கள்? இது வேதனையான விஷயம். ஒட்டுமொத்த நாட்டின் பேட்டிங்கும் உங்களைச் சார்ந்திருக்கும்போது, குறைந்தபட்சம் அப்படி ஒரு மோசமான ஷாட் அடித்து ஆட்டமிழக்காமல் ஆவது இருங்கள் என 'தி கேம் பிளான்' நிகழ்ச்சியில் பாசில் கூறினார்.

