\
bangladesh historic win in australia
bangladesh historic win in australiacricket australia

‘கம்மின்ஸ் படையை’ ஊதித்தள்ளிய வங்கதேசம்.. இந்தியா, பாகிஸ்தான் செய்யாத சாதனை.. 4 அசாத்திய Records!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்தமண்ணில் வைத்து டெஸ்ட்டில் முதன்முறையாக வீழ்த்தியிருக்கும் வங்கதேச அணி கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.
Published on
Summary

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் வெற்றி பெற்ற வங்கதேசம், இதை மிகக் குறைந்த 3 போட்டிகளில் சாதித்த ஆசிய அணியாக உயர்ந்தது. இந்தியா, பாகிஸ்தான் கூட பல முயற்சிகளுக்குப் பிறகே இதை செய்த நிலையில், கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட், லயன், ஸ்மித் உள்ளிட்ட முழு பலத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 31 ஆண்டுகளாக இந்தியா தவிர யாராலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள டர்வின் மைதானத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த ஆஸ்திரேலியா, 20 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிராக டர்வின் மைதானத்தை தேர்வுசெய்தது. வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற முடிவில் ஆஸ்திரேலியா எடுத்த அந்த முடிவு, ஒரு வரலாற்று அப்செட்டிற்கு அவ்வணியை அழைத்துச்சென்றுள்ளது.

போட்டியில் என்ன நடந்தது?

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை, தன்னுடைய வேகப்பந்துவீச்சு தாக்குதல் மூலம் நிலைகுலைய வைத்தார் ஹசன் மஹ்மூத். டிராவிஸ் ஹெட்டின் ஸ்டம்புகளை பறக்கவிட்ட மஹ்முத், மற்றொரு தொடக்க வீரரான ஜேக் வெதரால்டை அடுத்த ஓவரில் அவுட்டாக்கினார். அடுத்தடுத்து வந்த லபுசனே 1 ரன், க்ரீன் 13, அலெக்ஸ் கேரி 19, வெப்ஸ்டர் 12, பாட் கம்மின்ஸ் 9 என விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல் சரியவிட்டது ஆஸ்திரேலியா அணி. எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு காப்பானாக காத்துநிற்கும் ஸ்டீவ் ஸ்மித் இந்தமுறையும் 71 ரன்கள் அடித்து வங்கதேசத்திற்கு ஆட்டம் காட்டினார். ஆனால் மீண்டும் ஆஸிக்கு வில்லனாக வந்த ஹசன் மஹ்மூத் ஸ்மித்தை அவுட்டாக்கியது மட்டுமில்லாமல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 200 ரன்கள் கூட அடிக்க விடாமல் 198 ரன்களுக்கே சுருட்டினார். வங்கதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியா 200 ரன்கள் கூட அடிக்காதது இதுவே முதல்முறை.

aus vs ban first test
aus vs ban first testbcb

ஆஸ்திரேலியாவுக்கே இந்த நிலைமை, வங்கதேசம் எளிதில் சுருண்டுவிடும் என நினைத்தபோது தான், 426 ரன்களை குவித்த வங்கதேச அணி அதிர்ச்சி கொடுத்தது. ஒருவர் போனால் ஒருவர் என பேட்டிங்கில் மிரட்டிய வங்கதேச வீரர்கள் தரமான செய்கையை செய்துகாட்டினர். அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101 ரன்கள் அடித்து மிரட்டினார். வங்கதேச கேப்டன் சாண்டோ 84 ரன்கள் மற்றும் மெஹிதி ஹாசன் 65 ரன்கள் அடித்து அணியை வலுவான லீடுக்கு எடுத்துச்சென்றனர். 426 ரன்கள் குவித்த வங்கதேசம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 228 ரன்கள் லீட் எடுத்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 200 ரன்களை அடிக்கவிடாதது மட்டுமில்லாமல், அவர்களுக்கு எதிராக 200 ரன்கள் லீட் எடுத்த வங்கதேசம் ஆஸி மண்ணில் வரலாற்று வெற்றிக்கு அடித்தளம் போட்டது.

Tanzid Hasan Tamim
Tanzid Hasan Tamim

இனிமேல் ஆஸ்திரேலியா தப்பிக்க வேண்டுமானால் பேட்டிங்கில் மேஜிக் நிகழ்த்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை இருந்தபோது, 2வது இன்னிங்ஸிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேசம் 284 ரன்களுக்கு சுருட்டியது. என்னதான் காம்ரூன் க்ரீன் சதமடித்து போராடினாலும் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியவில்லை. வெறும் 57 ரன்கள் மட்டும் அடித்தால் வெற்றி என விளையாடிய வங்கதேச அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

bangladesh historic win in australia
உடைந்த ஆஸ்திரேலியா பேட்டிங்.. ஆஸி மண்ணில் வரலாற்று வெற்றியை நோக்கி வங்கதேசம்.!

4 அசாத்திய சாதனைகள்..

முதல்முறையாக ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்தமண்ணிலேயே வைத்து தோற்கடித்த வங்கதேச அணி, இதற்கு முன் எந்த ஆசிய அணியுமே செய்யாத சாதனையை படைத்தது. ஆஸ்திரேலியாவில் விளையாடிய வெறும் 3 டெஸ்ட் போட்டிகளிலேயே முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த வங்கதேசம், ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்த ஆசிய அணியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் 7 போட்டிகளிலும், இந்தியாவால் 12 போட்டிகளுக்கு பிறகுமே இதை செய்யமுடிந்தது. இலங்கை அணி 15 முயற்சிகளுக்குப் பிறகும் வெற்றிபெற முடியாமல் இருந்துவருகிறது.

31 ஆண்டுகளாக இந்தியாவை தவிர மற்ற எந்த ஆசிய அணியாலும் தோற்கடிக்க முடியாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சம்பவம் செய்துள்ளது வங்கதேசம்.

bangladesh historic win in australia
bangladesh historic win in australia

கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட், நாதன் லயன், ஸ்மித், டிராவிஸ் ஹெட், லபுசனே, அலெக்ஸ் கேரி, காம்ரூன் க்ரீன் என தங்களுடைய முழு பலத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை, ஒரு நேர்த்தியான, சரியான கிரிக்கெட் மூலம் வீழ்த்தியிருக்கும் வங்கதேச அணியின் இந்த வெற்றி காலத்திற்கும் போற்றப்படவேண்டிய ஒரு வெற்றியாகும். அந்த வீரர் இல்லை, இந்த வீரர் இல்லை, அதனால் தான் ஜெயிச்சிட்டாங்க என்ற சொல்லுக்கு இடமளிக்காமல் முழு பலமான ஆஸியை தோற்கடித்து தரமான சம்பவம் செய்துள்ளது வங்கதேசம். வாழ்த்துக்கள்!

bangladesh historic win in australia
30 ஆண்டில் முதல் சதம்.. கங்குலிக்கு பின் 2வது வீரர்.. தமிழக வீரரின் கனவை சிதைத்த படிக்கல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com