’ஐசிசி இடமிருந்து நீதி கிடைக்கவில்லை..’ டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகும் வங்கதேசம்..?
வங்கதேசம், இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு பயணம் செய்யமாட்டோம் என வங்கதேசம் உறுதியுடன் உள்ளது. ஐசிசி 24 மணிநேரத்தில் முடிவெடுக்குமாறு வலியுறுத்திய நிலையில், வங்கதேசம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கி அறிவித்தது பிசிசிஐ மற்றும் கேகேஆர் அணி.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக இருந்துவருகிறது.
இதுகுறித்து விவாதிக்க ஐசிசி குழு வங்கதேசத்திற்குச் சென்றது. அதன்பிறகு, உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டது. ஆனால் வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதால், இந்தியாவில் பாதுகாப்பு பிரன்சைகள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டிய ஐசிசி, 24 மணிநேரத்தில் முடிவெடுக்கவில்லை என்றால் டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு பதிலாக மாற்று அணி களமிறக்கப்படும் எனவும் தெரிவித்தது.
இந்தசூழலில் தான் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள், வங்கதேச வாரியம் மற்றும் பயிற்சியாளர்களுடன் அவசர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் ஆலோசனையின் போதும், இந்தியாவிற்கு வந்து விளையாடமாட்டோம் என்பதில் வங்கதேசம் உறுதியுடன் இருப்பதாகவும், இதனால் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க வங்கதேசம் விரும்பவில்லை என்பது தெரிகிறது.
இந்தசூழலில் தான் வங்கதேச அணி 2026 டி20 உலகக்கோப்பையில் இடம்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற வீரர்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய BCB தலைவர் அமினுல் இஸ்லாம், ”இலங்கையில் விளையாடுவதற்கான எங்கள் திட்டத்துடன் நாங்கள் மீண்டும் ICC-க்குத் திரும்புவோம். அவர்கள் எங்களுக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை வழங்கினர், ஆனால் ஒரு உலகளாவிய அமைப்பால் உண்மையில் அதைச் செய்ய முடியாது. உலகக் கோப்பையைப் பார்க்கும் 200 மில்லியன் மக்களை ICC இழக்க நேரிடும். அது அவர்களுக்கு தான் இழப்பாக இருக்கும்” என கூறினார்.
விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் பேசுகையில், "ஐ.சி.சி-யிடமிருந்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடுவதா இல்லையா என்பது முற்றிலும் அரசாங்கத்தின் முடிவு" என்று பேசியுள்ளார்.

