IND என்றால் காட்டடி அடிக்கும் டிராவிஸ் ஹெட்.. திட்டமே வகுக்காமல் திணறும் ரோகித் & கோ! 3 சம்பவங்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 140 ரன்களை குவித்த டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் தோல்வியை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளார்.
’இந்தியா என்றாலே அடிதான்..’ என எப்போது நமக்கு எதிராக விளையாடினாலும் வெளுத்துவாங்கும் டிராவிஸ் ஹெட், இதுவரை 3 முக்கியமான தருணங்களில் இந்தியாவின் நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளார்.
2000-ம் காலகட்டத்தில் ரிக்கி பாண்டிங், மைக்கேல் பவன், சைமன்ஸ், மார்டின், ஹெய்டன், கில்கிறிஸ்ட் என பல ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக தனியாளாக போட்டியை வெல்லும்போது ஏற்பட்ட விரக்தி மனநிலையை, 2023-லிருந்து தற்போது வரை டிராவிஸ் ஹெட் கொடுத்துவருகிறார்.
இந்தியாவின் 3 முக்கியமான தருணங்களில் வெளுத்துவாங்கிய டிராவிஸ் ஹெட் பலகோடி இந்தியர்களின் இதயங்களை நொறுக்கியுள்ளார்.
1. 2023 WTC இறுதிப்போட்டி
2021-ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி, 2023-ம் ஆண்டு மீண்டும் ரோகித் சர்மா தலைமையில் WTC இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எப்படியும் இந்தியா கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்த்த போது, இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிம்மசொப்பனமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை 469 ரன்கள் என்ற திடமான டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
டிராவிஸ் ஹெட்டின் எதிரடி தாக்குதலில் துவண்டுபோன இந்தியா, அதற்குபிறகு மீண்டுவர முடியாமல் தொடர்ச்சியாக 2வது WTC இறுதிப்போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி
முந்தைய முறை இங்கிலாந்து மண்ணில் அடிவாங்கிய இந்திய அணி, இந்தமுறை 2023-ல் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இடம் மரண அடி வாங்கியது. ஹெட்டின் தலைநிமிர்ந்த ஆட்டத்தால் இந்திய அணியுடன் பலகோடி இந்திய ரசிகர்களும் கண்ணீர் வடித்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எப்படியும் இந்தியா கம்பேக் கொடுத்துவிடும் கோப்பையை வென்றுவிடும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, டிராவிஸ் ஹெட்டின் நிதானமான ஆட்டம் பேரிடியாக விழுந்தது. இறுதிப்போட்டியில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி 137 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட், ரோகித் சர்மாவின் கனவு கோப்பையின் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார்.
அந்தப்போட்டியிலும் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. 2025 WTC ஃபைனல் வாய்ப்பு
2023 WTC இறுதிப்போட்டியை தொடர்ந்து மூன்றாவது முறையாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்தியா முன்னேறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது. அதனையும் உடைக்கும் வகையில் தற்போது டிராவிஸ் ஹெட் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 140 ரன்கள் குவித்துள்ளார்.
அவருடைய அதிரடி அணுகுமுறைக்கு எதிராக பந்துவீச முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து தடுமாறுவதை பார்க்க முடிகிறது. பவுலர்களை யோசிக்கவே விடாமல் தலையில் ஏறி அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் டிராவிஸ் ஹெட், மீண்டும் மீண்டும் வெற்றிப்பெற்றுக்கொண்டே இருக்கிறார். அவருடைய வெற்றி ’அட போங்க பா’ என இந்திய அணி மீது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் வகையில் தொடர்ந்து அமைந்தாவாறே இருந்துவருகிறது.
டிராவிஸ் ஹெட்டுக்கான திட்டமே இந்திய அணியிடம் இல்லை..
ஒருவீரர் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு எதிராக தனியொரு ஆளாக ஆதிக்கம் செலுத்திவரும் போதும், ஒருமுறை கூட இந்திய அணியோ, இந்திய அணியின் கேப்டனோ அவருக்கு எதிராக ஒரு ஃபீல்ட் செட்டையோ, ஒரு பவுலிங் பிளானோ கொண்டுவந்ததாக நாம் இதுவரை பார்க்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பவுலர்கள் கூட டிராவிஸ் ஹெட்டுக்கு எதிரான பிளானோடு வந்து விக்கெட்டை வீழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், நம்பர் 1 அணியாக இருந்துவரும் இந்திய அணி ஒரு தனிப்பட்ட வீரருக்கு எதிராக எந்த திட்டமும் இல்லாமல் சென்று தொடர்ந்து அடிவாங்கி கொண்டிருப்பது இந்திய ரசிகராக நம்மை ஏமாற்றமடைய செய்கிறது.
இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் மீதமுள்ள 3 போட்டிகளில் இந்திய அணி வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்டமுடியும். அதற்கு மீதமிருக்கும் 3 போட்டிகளில் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக இந்திய அணி ஒரு சிறந்த பிளானோடு செல்ல வேண்டியது அவசியமான ஒன்று!