IPL தொடரிலிருந்து விலகும் ஆயுஸ் மாத்ரே.. பேட்டிங் கோச் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கால்முட்டி காயத்துடன் களமிறங்கி 13 பந்தில் 30 ரன்கள் குவித்த ஆயுஷ் மாத்ரே, பின்னர் காயம் மோசமடைந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் நிலை உருவாகியுள்ளது. ஃபிஸியோ பரிசோதித்தும் அவரை மைதானத்தில் வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை அஸ்வின் கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், கால்முட்டியில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்திருந்தார். ஃபிஸியோ வந்து பரிசோதித்த பிறகும் அவரை ஏன் தொடர்ந்து விளையாட வைத்தீர்கள் என கேள்வி எழுப்பிய அஸ்வின், காயம் பெரிதானால் அவரால் மீண்டும் அணிக்குள் வரமுடியாது என்றும் எச்சரித்திருந்தார்.
இந்தசூழலில் தற்போது ஆயுஸ் மாத்ரே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற SRH அணிக்கு எதிரான போட்டியில் காயத்துடன் களமிறங்கி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த ஆயுஷ் மாத்ரே, 13 பந்தில் 30 ரன்கள் விளாசி அணியை வெற்றியின் பக்கம் கொண்டுசென்று வெளியேறினார். ஆனால் 10 ஓவரில் 111 ரன்களை அடித்தபிறகும், கடைசி 10 ஓவரில் 84 ரன்களை அடிக்க முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. ஒருத்தன் காயத்தோடு வந்து விளையாடி கொடுத்தும் தோற்றது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசூழலில் தற்போது காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே இனிவரும் போட்டிகளில் விளையாட முடியாது, நடப்பு தொடரிலிருந்து விலக வாய்ப்பிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆயுஷ் மாத்ரே குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி, ”தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக நாளை அல்லது மறுநாள் அவருக்கு ஸ்கேன் செய்வோம். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் காயம் மிகவும் மோசமாகத் தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு அவர் ஒரு பெரிய இழப்பாக இருக்கப் போகிறார், ஏனென்றால் அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். ஆயுஷை இழந்தது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், ஒரு புதிய வீரர் வந்து வாய்ப்பு பெறுவது உற்சாகமான விஷயமாகும். எங்களிடம் சிறந்த வீரர்கள் பலர் வெளியில் இருக்கிறார்கள்” என்று பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

