காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிட்டயர்டு ஹர்ட் மூலம் மாற்றியிருந்தால், இறுதியில் மீண்டும் வந்து போட்டியை வெற்றிக்கு அழைத்திருக்க முடிந்திருக்கும் வாய்ப்பை சிஎஸ்கே வீணாக்கியது.
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார்.
ரிட்டயர்டு ஹர்ட் மூலம் அவரை வெளியே அனுப்பிவிட்டு, வேறொரு வீரரை விளையாட வைத்திருந்தால், கடைசியாக கூட அவரால் வந்து போட்டியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருக்க முடியும். அந்த வாய்ப்பையும் தவறவிட்ட சிஎஸ்கே அணி, காயத்தோடு அவரை விளையாட வைத்தும் பெரிய தவறு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் சர்மா, கிளாஸனின் அரைசதங்களின் உதவியால் 194 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே 10 ஓவரில் 111 ரன்கள் அடித்தபிறகும் வெற்றிபெறவேண்டிய இடத்திலிருந்து 10 ரன்னில் தோற்று அதிர்ச்சி கொடுத்தது.
ஆயுஸ் மாத்ரேவின் காயம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஆயுஷ் மத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதை தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இஞ்சூரி மேனேஜ்மெண்ட்டின் வேலை.
களத்தில் அவர் நொண்டியபடி இருக்கிறார், உங்களுடைய பிசியோதெரபிஸ்டுகள் வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்குபிறகும் அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைக்கிறீர்கள். இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாள முடிகிறது” என காட்டமாக பேசியுள்ளார்.

