ஆஸி. ஸ்பின்னர்களிடம் சுருண்ட இலங்கை.. சொந்த மண்ணில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் தோல்வி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இலங்கையின் காலி ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா 232 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் 102 ரன்கள் என மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் சதமடித்து அசத்த முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது ஆஸ்திரேலியா அணி.
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி..
ஆஸ்திரேலியா அணி மலைபோல 654 ரன்களை குவித்த பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. சொந்த மண்ணில் எப்படியும் இலங்கை அணியும் சிறப்பாக பேட்டிங் செய்யும் என எதிர்ப்பார்த்த நிலையில், ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் மேத்யூ குனேமன் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்த 165 ரன்களில் சுருண்டது இலங்கை அணி.
ஆஸ்திரேலியா அணி ஃபால்லோவ் ஆன் எடுக்க தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் 247 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸிலும் குனேமன் மற்றும் நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதன் மூலம் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா அணி.
இரட்டை சதமடித்த உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.