மகளிர் உலகக்கோப்பை| அரையிறுதி சென்றது ஆஸ்திரேலியா.. முதல் அணியாக அசத்தல்!
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் தோல்வியே இல்லாமல் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா..
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா அணி, தோல்வியே இல்லாமல் 4 போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் புள்ளிகள் பகிர்வு மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது..
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..
2025 உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடியது ஆஸ்திரேலியா மகளிர் அணி. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 198 ரன்கள் மட்டுமே அடித்தது.
199 இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கெட்டையே இழக்காமல் 202 ரன்களை அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவிற்கு எதிராக சதமடித்து ஃபார்மிற்கு திரும்பிய ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி தொடர்ந்து 2வது சதத்தை (113*) பதிவுசெய்து அசத்தினார். உலகக்கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் 2 முறை சதமடித்த முதல் வீராங்கனையாக சாதனை படைத்தார்..
5 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது. புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா முதலிய அணிகள் நீடிக்கின்றன. இந்தியா அடுத்த போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்கிறது..