CSK-வைத் தொடர்ந்து பயிற்சியாளரை மாற்றிய மும்பை அணி.. யார் இந்த லூக் வில்லியம்ஸ்?
ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை அணியும் சென்னை அணியைப் போன்றே தலைமைப் பயற்சியாளரை மாற்றியுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2027ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு சீசனுடன் தனது பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா கெய்ட்லிக்கு பதிலாக லூக் வில்லியம்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின்கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த ஜூலை மாதம் விலகினார்.
இந்தச் சூழலில்தான், புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளது.
இந்த நிலையிதான் சென்னை அணியைப் போன்றே, 2027 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து லிசா கெய்ட்லி விலக முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக லூக் வில்லியம்ஸ் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட்டின் முன்னாள் வீராங்கனையான லூக் வில்லியம்ஸ், அந்நாட்டில் நடைபெற்ற மகளிர் பிக் பாஷ் லீக் (2022, 2023), இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹன்ட்ரட் (உதவிப் பயிற்சியாளராக, 2023), மற்றும் இந்தியாவில் நடைபெற்ற WPL (2024) ஆகிய மூன்று முக்கியப் போட்டிகளில் கோப்பையை வென்ற அணிகளில் அவர் அங்கம் வகித்துள்ளார். கிரேடு கிரிக்கெட்டிற்கான பிராட்மேன் பதக்கத்தை மூன்று முறை (2005/2006, 2007/2008, 2009/2010 ஆகிய சீசன்களில்) பெற்ற வில்லியம்ஸ், 2025 முதல் இங்கிலாந்து மகளிர் அணியின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றியது உட்பட, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் 20 வருடங்களாகப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

