’அதுலதான் நான் ஸ்பெசலிஸ்ட்டே..’ | 69 பந்தில் சதம்.. இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப்பறித்த ஹெட்!
டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்தின் வெற்றிக்கனவை சுக்குநூறாக்கினார். 83 பந்தில் 123 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தார். 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வெற்றிக்காக போராடும் இங்கிலாந்து அணி, ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
ஒரு அணிக்கு எப்போதெல்லாம் வெற்றி தேவைப்படுகிறதோ, எப்போதெல்லாம் அவர்களுக்கு அது வரலாறாக மாறப்போகிறதோ, அப்போதெல்லாம் ‘குறுக்க இந்த கௌசிக் வந்தா’ என்பது போல் வில்லனாக வந்து சேர்ந்துவிடுகிறார் டிராவிஸ் ஹெட்..
இந்திய அணிக்கு எதிராக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி என இரண்டிலும் சதமடித்து வில்லனாக மாறிய டிராவிஸ் ஹெட், 14 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை வெல்ல போராடிவரும் இங்கிலாந்திற்கு இன்று வில்லனாக மாறி ’பாஸ்பால்’ கனவை சுக்குநூறாக்கினார்..
14 ஆண்டுகளாக வெல்லாத சோகம்!
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.. அதற்குபிறகு 14 வருடங்களாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றிக்காக போராடிவருகிறது.. அதிலும் 2022-ஆம் நடந்த ஆஷஸ் தொடரில் 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாமல் 4-0 என படுமோசமான தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி..
அதற்குபிறகு தான் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிரெண்டன் மெக்கல்லம் ‘பாஸ்பால்’ அட்டாக் அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்குள் கொண்டுவந்தார்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் அந்த அணுகுமுறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்காகவே தொடங்கப்பட்டது..
இந்தசூழலில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய 2025 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் தொடங்கியது..
தனியாளாக சம்பவம் செய்த ஹெட்..
பெர்த் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.. முதல் ஓவரிலேயே ஜாக் கிராவ்லியை வெளியேற்றிய ஸ்டார்க் பிரமாதமான தொடக்கத்தை கொடுத்தார்.. தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்டார்க்கை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி 172 ரன்னில் சுருண்டது.. 7 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார் மிட்செல் ஸ்டார்க்..
ஆஸ்திரேலியா சிறப்பாக தொடங்க இங்கிலாந்து என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.. ஆனால் இங்கிலாந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை தட்டித்தூக்க ஆட்டம் அனல் பறந்தது.. தொடர்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கழற்ற வெறும் 132 ரன்னுக்கே சுருண்டது ஆஸ்திரேலியா..
40 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிங்க முடிந்தது.. இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க்..
205 ரன்கள் அடித்தால் வெற்றி என ஆஸ்திரேலியா களமிறங்கிய நிலையில், எப்படியும் இங்கிலாந்துக்கு தான் வெற்றி என நிலையே இருந்தது.. ஆனால் ‘குறுக்க இந்த கௌசிக் வந்தா’ என்பது போல, முதல் இன்னிங்ஸில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 4வது இன்னிங்ஸில் சேஸிங்கில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அதிரடிக்கு பெயர் போன ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸ்திரேலியாவின் யுக்தி பலித்தது.. 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 140 ஸ்டிரைக்ரேட்டில் பொலந்துகட்டிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்தின் வெற்றிக்கனவை ஒட்டுமொத்தமாக சுக்குநூறாக்கினார்..
69 பந்தில் சதமடித்த டிராவிஸ் ஹெட் 123 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.. 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றிக்காக போராடிவரும் இங்கிலாந்தின் போராட்டம் தொடர்கிறது..

