உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது... அணி முழுக்க ஆல் ரவுண்டர்கள்!

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம்.
Pat Cummins
Pat CumminsTwitter

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணி முழுக்க ஆல் ரவுண்டர்கள் நிறைந்திருக்கும் அந்த ஸ்குவாடில் ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி தங்கள் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்த்து சென்னையின் விளையாடுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 18 பேர் கொண்ட முதல் கட்ட அணியை அறிவித்திருந்த ஆஸ்திரேலியா தற்போது இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம்.

Pat Cummins
ஒருநாள் உலகக் கோப்பை தொடர்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

முதல் கட்ட அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளி ஸ்பின்னர் தன்வீர் சங்கா, ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி, வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 12-13 இடங்கள் உறுதியாகியிருந்தது. அதிக ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றிருந்ததால் 4 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் பேக் அப் வேகப்பந்துவீச்சாளர் ஸ்லாட்டுக்கு எல்லிஸ், அபாட் இருவருக்கும் இடையே போட்டி இருந்தது. அந்த இருவரில் அபாட்டுக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. எப்படியும் மிட்செல் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹேசில்வுட் மூவரும் ஃபிட்டாக இருந்தால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிடுவார்கள். கிரீன், மிட்செல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் என மூன்று ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் இருப்பதால், அவர்கள் அனைவருமே பிளேயிங் லெவனிலும் இடம்பெறுவார்கள் என்பதால் கூடுதல் வேகப்பந்துவீச்சு ஆப்ஷன் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்படவில்லை.

இந்தக் காரணத்தினால் ஆஸ்திரேலிய அணி 3 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 22 வயது இந்திய வம்சாவளி ஸ்பின்னர் தன்வீர் சங்காவுக்கு இடம் கிடைக்கலாம் என்று கருதப்பட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதில் முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். இருந்தாலும் அகர், ஜாம்பா என இரு ஸ்பின்னர்களை மட்டும் தேர்வு செய்திருக்கும் ஆஸ்திரேலியா, அந்த கூடுதல் ஸ்லாட்டை பேக் அப் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்குப் பயன்படுத்தியிருக்கிறது. அந்த இடத்தில் ஜாஷ் இங்லிஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மிகவும் பலமான அணியாக விளங்கும் ஆஸ்திரேலியாவுக்கு இப்போது இருப்பது ஃபிட்னஸ் என்ற பிரச்சனை தான். கெப்டன் கம்மின்ஸ், ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என அனைவருக்குமே தற்போது ஃபிட்னஸ் பிரச்சனை இருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்கள் முழு ஃபிட்னஸோடு அணிக்குத் திரும்பிடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறது ஆஸ்திரேலிய நிர்வாகம். அந்த 4 சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஃபிட்டாக இல்லை என்றாலும் அந்த அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமையும்.

ஆஸ்திரேலியா உலகக் கோப்பை ஸ்குவாட்

பேட்ஸ்மேன்கள்: டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித்

விக்கெட் கீப்பர்கள்: அலெக்ஸ் கேரி, ஜாஷ் இங்லிஸ்

ஆல்ரவுண்டர்கள்: கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்

வேகப்பந்துவீச்சாளர்கள்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், ஜாஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்

ஸ்பின்னர்கள்: ஆஷ்டன் அகர், ஆடம் ஜாம்பா

உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ரோஹித்தின் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்குமே உலகக் கோப்பைக்கு முன்பான கடைசி ஒருநாள் தொடர் அதுதான்.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அட்டவணை

முதல் போட்டி - செப்டம்பர் 22 - மொஹாலி

இரண்டாவது போட்டி - செப்டம்பர் 24 - இந்தூர்

மூன்றாவது போட்டி - செப்டம்பர் 27 - ராஜ்கோட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com