AsianGame: பரபரப்பான ஆட்டம். குறைவான ரன் அடித்தும் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர்அணி

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா டீம்
இந்தியா டீம்ட்விட்டர்
Published on

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. அதேநேரத்தில், தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. எனினும் இந்தோனேசியா, மங்கோலியா, மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடின.

இந்தியா டீம்
இந்தியா டீம்ட்விட்டர்

இறுதியில் இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று (செப். 25) நடைபெற்றது. இதில், டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் குவித்தது. இதில், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனைகளில் சமரி அத்தப்பட்டு மட்டும் 12 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அனுஷ்கா சஞ்சீவனி 1 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விஷ்மி குணரத்ன டக் அவுட்டில் வெளியேறினார். இதையடுத்து ஹசினி பெரேரா மற்றும் நிலாக்‌ஷி டி சில்வா இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். எனினும், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெரேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க, டி சில்வா 23 ரன்களில் வெளியேறினார்.

இந்தியா டீம்
இந்தியா டீம்ட்விட்டர்

அதன்பிறகு வந்த ஓஷதி ரணசிங்க 19 ரன்கள் சேர்த்தார். இறுதியாக, வந்த வீராங்கனைகளும் பெரிதாக சோபிக்கத் தவறினால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை வென்றுள்ளது. மேலும், இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com