Asia Cup | நேபாளத்துடனான போட்டியும் மழையால் பாதிக்க வாய்ப்பு? அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?

நாளை நடைபெறும் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்லகெலே மைதானம்
பல்லகெலே மைதானம்ட்விட்டர்

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கு பெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறுகின்றன.

இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா
இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாட்விட்டர்

இந்த நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று (செப்டம்பர் 2), இலங்கை கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பரிதவித்தது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும், இஷான் கிஷனும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டுச் சென்றனர். இவர்களின் அடித்தளத்தால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

பல்லகெலே மைதானம்
இடது கை பேட்டிங்... இடது கை பௌலிங்... இந்தியாவுக்கு எல்லாமே பஞ்சாயத்து தான்!

பின்னர் வந்த வீரர்களும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுக்கு இரையாகியதால் இந்திய அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனையை படைத்தனர். அது என்னவெனில் ஆசியக் கோப்பை வரலாற்றில் 50 ஓவர்கள் கொண்ட போட்டியின், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி முதல்முறையாக சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ரால்ப் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

பின்னர், 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது பேட்டிங் செய்ய இருந்த பாகிஸ்தான் அணிக்கு, தொடர்ந்து பெய்த கனமழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதுடன் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து புள்ளிப் பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 1 புள்ளியுடன் இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்த அணிகளின் பிரிவில் (ஏ பிரிவு) இடம்பெற்றிருக்கும் நேபாளம் அணி இதுவரை புள்ளி எதுவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நாளை (செப்.4) இதே பல்லகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்லகலேவில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்று மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் கண்டி பல்லேகலேயில் இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக அது தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா - நேபாளம் ஆட்டம் நாளை முழுமையாக நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை வைத்து ஐசிசியும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி பாதிக்கப்படலாம் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஒருவேளை, மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரைவிட்டு வெளியேறும். பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com