
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (ஆகஸ்ட் 30) பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. முன்னதாக, ஆசிய நாடுகளில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் மோதும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது.
பிசிசிஐ எதிர்ப்பு காரணமாக சில போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெற உள்ளன. மொத்தம் 13 போட்டிகளைக் கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, ஏ பிரிவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் உள்ள முல்தானில் இன்று (ஆகஸ்ட் 30) நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.
இந்த தொடரில் பரமஎதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் 2ஆம் தேதி இலங்கையில் நடைபெற உள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக இதுவரை ஆசியக் கோப்பையை வென்ற அணிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆசியாவில் இடம்பெற்றுள்ள அணிகளை கொண்டு நடத்தப்படும் இந்த தொடர், கடந்த 1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆசியக் கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 7 (1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018) முறையும், இலங்கை 6 (1986, 1997, 2004, 2008, 2014, 2022) முறையும், பாகிஸ்தான் 2 (2000, 2012) முறையும் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பலமுறை இத்தொடர்களில் பங்கேற்றும் இதுவரை கோப்பையை உச்சிமுகரவில்லை.
2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கோப்பை, டி20 போட்டியாக விளையாடப்பட்டது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியதால் அந்த அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.
6 முறை கோப்பையை முத்தமிட்டுள்ள இலங்கை அணி, 6 முறை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. 1984 முதல் 2010 வரை தொடர்ந்து 10 ஆசிய கோப்பை தொடர்களில் இலங்கை அணி பைனலில் விளையாடி உள்ளது. மொத்தத்தில் இதுவரை நடந்த 15 ஆசிய கோப்பைகளில், அந்த அணி 12 முறை பைனலில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 10 முறையும், பாகிஸ்தான் 5 முறையும், வங்கதேசம் 3 முறையும் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளன.