ஆசியக் கோப்பை | பந்துவீச்சில் சுருண்ட UAE.. சுலபமாய் வெற்றிபெற்ற இந்தியா!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2வது லீக் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவமில்லாத ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதியது. அதன்படி, டாஸ் ஜெயித்த இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் முகமது வசீமும், அலிசன் ஷரபுமுமே சற்று நேரம் நிலைத்திருந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். அலிசன் 22 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டாக, மறுபுறம் கேப்டன் வசீமை 19 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். அவர்களின் வெளியேற்றத்திற்குப் பின்னர் வந்த அரபு அணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சில் அவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தபடி நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி, 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஷிவம் துபே 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர், மிகமிக எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓவர்களுக்குள்ளேயே வெற்றி இலக்கைத் தொட்டது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இன்னொரு தொடக்க பேட்டர் ஷுப்மன் கில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்குத் துணையாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் (7 ரன்கள்) களத்தில் இருந்தார். இதையடுத்து, இந்திய அணி, 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவ் பெற்றார்.