Asia Cup 2025| சூப்பர் ஸ்டார்களோடு களமிறங்கும் ஆஃப்கானிஸ்தான்.. இம்முறை கோப்பை சாத்தியமா?
எந்த அணியையும் தோற்கடிக்கும் ஆற்றல் இந்த அணிக்கு உண்டு. சமீப ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியப் போட்டிகள் அதற்குச் சான்றாக உள்ளன.
சமீப காலத்தில் டி20 வடிவத்தில் தங்களுடைய ஆட்டத்தை மெருகேற்றியிருக்கும் ஒரு அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் மட்டுமே. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பிறகு அதிக (61%) வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் ஒரே ஆசிய அணி ஆப்கானிஸ்தான் மட்டுமே. கடந்த ஒரு வருடத்தில் 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 13 போட்டிகளில் வென்றுள்ளது. சமீபத்தில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், யுஏஇ இரண்டு அணிகளையும் வீழ்த்தி ஃபார்மை தொடர்ந்து வருகிறது ஆப்கானிஸ்தான் அணி.
அனுபவ ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தலைமையில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பலம் அதன் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சு. இதில் ரஷீத் கான், முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகிய சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஃபசல்ஹக் ஃபாரூக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் கைகொடுப்பார்கள் என நம்பலாம்.
2017-ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் ரஷித் கான் களமிறங்கியபோது, அந்த லீக்கில் அவர் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனால் எட்டு ஆண்டுகள் கழித்து, தற்போது T20 கிரிக்கெட்டில் அவரைவிட அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. கிட்டத்தட்ட 487 இன்னிங்ஸில் 669 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்; இன்னும் வீழ்த்துவார். இதேபோலதான் அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் இருக்கின்றனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஜனவரி 2024 முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட T20 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஏழு பந்துவீச்சாளர்களில், ரஷித் கான், நூர் அஹ்மத், ஃபரூக்கி ஆகிய மூவரும் ஆஃப்கனைச் சேர்ந்தவர்கள்.
உலக அளவில் நடக்கும் பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் நட்சத்திரங்களாக இருக்கும் வீரர்கள் ஒன்று சேரும் போது அவர்களால் ஏன் எந்த ஒரு தாக்கத்தையும் அல்லது கோப்பையையும் சர்வதேச அளவில் வெல்லமுடியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பந்துவீச்சு வலுவாக இருந்தாலும், பேட்டிங் வரிசையில் ஆழமின்மை இருக்கிறது. பேட்டிங்கின் பெரும் சுமையை தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் போன்றோர் தாங்கிக் கொள்கின்றனர். ஆனால், மிடில் ஆர்டர்தான் அணியின் பல தலைவலியாக பல ஆண்டுகளாக இருக்கிறது. மிக முக்கியமாக கடந்த ஆண்டு முழுவதும் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் மோசமாகவே இருந்திருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் 8 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே 180 ரன்களைக் கடந்துள்ளது. எனவே, தர்விஷ் ரசூலி, சேதிக்குல்லா அடல், முகமது இஷாக் ஆகிய பேட்ஸ்மேன்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் அனைத்து குரூப் சுற்று போட்டிகளும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி, அடுத்துள்ள ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் கோப்பை வெல்ல 84% சதவீதம் வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய ஒரே அணியாக தற்போது ஆப்கானிஸ்தான் விளங்குகிறது.
ஆப்கானிஸ்தான் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், நூர் அஹ்மத், நூர் அஹ்மத், ஃபரித் அகமது மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக்
சாத்தியமான XI: ரஹ்மானுல்லா குர்பாஸ் (WK), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான் (கேப்டன்), AM கசன்ஃபர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி