2027 ODI WC| ’புவனேஷ்வர் குமார், சிராஜை அணியில் எடுங்க..’ முன்னாள் வீரர் கோரிக்கை!
இங்கிலாந்து தொடரில் டெத் ஓவர்களில் 80 ரன்கள் கசிந்த தோல்வி பின்னணியில், 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய பவுலிங் யூனிட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் கூறுகிறார். குல்தீப் யாதவின் பயன்பாடு, ஃபிங்கர் ஸ்பின்னர் தேர்விலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி இந்திய ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவார்களா? பேட்ஸ்மேன்கள் வரிசையில் மாற்றம் செய்யப்படுமா? என்ற குழப்பங்களுக்கு மத்தியில், இந்திய அணியில் பந்துவீச்சு கவலைக்குரிய விசங்களாக இருந்துவருகிறது. அதிலும் பும்ரா அணியில் இல்லாமல் போனால், ஒட்டுமொத்தமாக பவுலிங் யூனிட் பாதாளத்திற்கு செல்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட பும்ரா இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 3வது ஒருநாள் போட்டியில் கடைசி 5 ஓவரில் விட்டுக்கொடுத்த 80 ரன்களால் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிலும் அனுபவம் இல்லாத இந்திய பவுலர்கள் அந்தப்போட்டியில் மட்டும் 32 ரன்களை எக்ஸ்டார்வில் விட்டுக்கொடுத்தனர். அதை தடுத்து நிறுத்தியிருந்தால் கூட இந்திய அணி இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கும்.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய பந்துவீச்சு யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக நல்ல ஃபார்மில் இருந்துவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சிராஜை அணிக்குள் எடுத்துவர வேண்டும் என இந்திய கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடவிருப்பதால் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜை அணியில் எடுத்துவர வேண்டும் என்று கூறினார். மேலும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கும் குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும், வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல் என ஃபிங்கர் ஸ்பின்னர்களில் ஒருவரை மட்டும் அணியில் தேர்வுசெய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

