
அர்ஜென்டினாவிற்கு சுற்றுப்பயணம் செய்த சிலி மகளிர் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அர்ஜென்டினா அணி 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லுசிகா 84 பந்துகளில் 27 பவுண்டரிகளை விளாசி 169 ரன்களும், அல்பெர்டினா கலன் 84 பந்துகளில் 23 பவுண்டரிகளை விளாசி 145 ரன்களும் குவித்தனர். 3வதாக களமிறங்கிய மரியா 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களை விளாசினார். சிலி அணியின் பவுலர்களில் 3 பேர் 10க்கும் மேற்பட்ட எகானமியும், 2 பேர் 20க்கும் மேற்பட்ட எகானமியும் வைத்திருந்தனர். ஒரு பவுலர் மட்டும் ஒரே ஓவரில் 52 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்தார்.
428 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சிலி அணி 15 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அர்ஜென்டினா அணி 29 எக்ஸ்ட்ராக்களை வீசியது. சிலி வீரர்களில் 7 பேர் 0 ரன்னும், 3 பேர் ஓரிலக்க ரன்னும், ஜெஸ்ஸிகா என்ற வீரர் மட்டும் 27 ரன்கள் அடித்தார்.
1. ஆடவர், மகளிர் என ஒரு டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (427) இதுவாகும்.
2. ஒரு ஓவரில் விட்டுக்கொடுக்கப்பட்ட (52 ரன்கள்) அதிகபட்ச ரன்கள்.
3. 364 ரன்கள் என்ற அதிகபட்ச மார்ஜின் வித்தியாசத்தில் வெற்றி.
4. இவ்வளவு ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியில் ஒரு சிக்சர்கள் கூட அடிக்கப்படவில்லை.
5. ஒரு டி20 இன்னிங்ஸில் அதிகமான (64) நோ-பால்கள் வீசப்பட்டன.
6. ஒரு டி20 போட்டியில் அதிகமான (66) நோ-பால்கள் வீசப்பட்டன.
7. ஒரு டி20 போட்டியில் அதிகமான (102) எக்ஸ்ட்ராக்கள் பதிவுசெய்யப்பட்டன.
8. ஒரு டி20 போட்டியில் அதிகமான (62) பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.