ENG vs IND 4வது டெஸ்ட்| சாய் சுதர்சன் கம்பேக்.. அறிமுகம் பெறும் அன்ஷுல் கம்போஜ்..!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் முடிவுற்ற நிலையில், இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்திய அணியில் இருக்கும் அனுபவமின்மை 3-0 என வெல்லவேண்டிய வாய்ப்பை 1-2 என இழக்க காரணமாக அமைந்தது.
இந்த சூழலில் இன்றும் மான்செஸ்டரில் நடக்கவிருக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வென்று 2-2 என தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்தியா களம்கண்டுள்ளது.
சர்வதேச அறிமுகத்தை பெறும் அன்ஷுல் கம்போஜ்!
மான்செஸ்டரில் இன்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்த தொடரில் 4 போட்டியிலும் இங்கிலாந்து அணியே டாஸ் வென்று விளையாடிவருகிறது.
டாஸ் இழந்தபிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிவித்தார். முன்பே அறிவித்தது போல காயம் காரணமாக ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் இடம்பெறவில்லை, அவர்களுக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சரியாக செயல்படாத கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் தன்னுடைய சர்வதேச அறிமுகத்தை மான்செஸ்டர் டெஸ்ட்டில் பெறுகிறார். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு மான்செஸ்டரில் கடைசியாக இந்திய வீரர் அனில் கும்ப்ளே சர்வதேச அறிமுகத்தை பெற்றார். அவருக்கு பிறகு அன்ஷுல் கம்போஜ் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார். இரண்டு வீரர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது, இருவருமே அறிமுகத்தின் போது முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளனர்.