இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய ஸ்பின்னர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் 155 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கடைசிநேரத்தில் பாஸ்பால் அட்டாக்கை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதிரடியாக விளையாடி 70 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 74 பந்துகளில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்த கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் என அடுத்தடுத்து அடிக்க 436 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்தைவிட 190 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி. சிறப்பாக பந்துவீசிய ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸை நன்றாகவே இங்கிலாந்து அணி தொடங்கினாலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தையே திருப்பி போட்டனர். 163 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியது. அவ்வளவுதான் எப்படியும் அடுத்த 50 ரன்களுக்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டாகிவிடும் என்று நினைத்தபோது தான், பாஸ்பால் அணுகுமுறை ஆட்டத்தை களத்தில் எடுத்துவந்தார் ஒல்லி போப்.
இந்திய ஸ்பின்னர்களை செட்டிலாகவிடாமல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என அனைத்தையும் ஆடிய ஒல்லிபோப் பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்தார். ரிவர்ஸ் ஸ்வீப்பை சிறப்பாக ஆடியதால், அவருக்கு எந்த இடத்தில் பந்துவீசுவது என்றே குழம்பி போனார்கள் இந்திய ஸ்பின்னர்கள். ஆனால் கடைசிவரை ஆட்டம் காட்டிய போப், 17 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்திடம் இன்னும் 4 விக்கெட்டுகள் இருக்கும் சூழலில், 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எளிதில் ஆல் அவுட்டாகும் என்று இருந்த நிலையில், தற்போது புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளார் போப்.
ஒல்லி போப் குறித்து மேட்ச் அனலைஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே, “ஒல்லி போப் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடினார். நான்காவது இன்னிங்ஸில் இதுவொரு டிரிக்கியான சேஸிங்காக இருக்கப்போகிறது. எப்படியும் கடைசி இன்னிங்ஸில் பந்து அதிகளவில் எழும்பாது, ஆனால் அதிகமாக திரும்பும். இதுபோன்ற சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்தால், அவர்களின் டாப் ஆர்டர் வீரர்களில் 2 பேரின் விக்கெட்டை இந்தியா எளிதில் இயக்க நேரிடும்.
நாளை இந்திய அணி 150 ரன்னுக்குள் இங்கிலாந்தை சுருட்டும் எண்ணத்தில் களமிறங்கும். ஆனால் ஒல்லிபோப்பிடம் இந்திய ஸ்பின்னர்களை எப்படி செட்டில் ஆகவிடாமல் தடுக்கமுடியும் என்ற திட்டம் இருக்கிறது. அவர் சாதாரணமாக விளையாடவில்லை, இந்த திட்டம் ஏற்கெனவே போடப்பட்டது. எப்படியிருப்பினும் இந்த சேஸிங் சுவாரசியமானதாக இருக்கப்போகிறது. ஏனென்றால் இந்திய அணியிடமும் சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.