ஓப்பனர் யார்? 4 ஓவர்சீஸ் யார்? பஞ்சாப் கிங்ஸின் சிறந்த பிளேயிங் லெவனில் இடம்பெறப்போவது யார்?
பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. 120 கோடி என்ற பெரும் தொகை கொடுக்கப்பட ஒவ்வொரு அணியும் கோடிகளை இறைத்து வீரர்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பல்வேறு ஏல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் புதிய உருவம் கண்டிருக்கின்றன. இப்போது அந்த ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கின்றன, அவர்களின் சிறந்த பிளேயிங் லெவன் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பற்றி அலசுவோம்.
இரண்டு அன்கேப்ட் வீரர்களை மட்டுமே ரீடெய்ன் செய்திருந்த பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியோடு ஏலத்தில் களம் கண்டது. ரிஷப் பந்தை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 26.75 கோடியைக் கொட்டி அவர்கள் ஷ்ரேயாஸ் ஐயரை வாங்கியிருக்கிறார்கள். தலா 18 கோடி கொடுத்து ஆர்ஷ்தீப் மற்றும் சஹால் ஆகியோரை வாங்கி பௌலிங்கை பலப்படுத்தியிருக்கிறார்கள். போக, மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோரையும் மீண்டும் அணிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள்:
மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (11 கோடி),
ஜோஷ் இங்லிஸ் (2.6 கோடி),
ஷ்ரேயாஸ் ஐயர் (26.75 கோடி),
கிளென் மேக்ஸ்வெல் (4.2 கோடி),
நேஹல் வதேரா (4.2 கோடி),
மார்கோ யான்சன் (7 கோடி),
ஹர்ப்ரீத் பிரார் (1.5 கோடி),
வைஷாக் விஜயகுமார் (1.8 கோடி),
ஆர்ஷ்தீப் சிங் (18 கோடி),
யுஸ்வேந்திர சஹால் (18 கோடி),
ஹர்னூர் பன்னு (30 லட்சம்),
பிரியான்ஷ் ஆர்யா (3.8 கோடி),
அஸ்மத்துல்லா ஓமர்சாய் (2.4 கோடி),
விஷ்னு வினோத் (95 லட்சம்),
பைலா அவினாஷ் (30 லட்சம்),
முஷீர் கான் (30 லட்சம்),
சூர்யான்ஷ் ஷெட்கே (30 லட்சம்),
லாக்கி ஃபெர்குசன் (2 கோடி),
ஆரோன் ஹார்டி (1.25 கோடி),
ஜேவியர் பார்ட்லெட் (80 லட்சம்),
யாஷ் தாக்கூர் (1.6 கோடி),
குல்தீப் சென் (80 லட்சம்),
பிரவீன் தூபே (30 லட்சம்)
ரீடெய்ன் செய்திருந்த வீரர்கள்:
பிரப்சிம்ரன் சிங் (4 கோடி), சஷாங்க் சிங் (5.5 கோடி)
பஞ்சாப் கிங்ஸின் சிறந்த பிளேயிங் லெவன்
1) பிரப்சிம்ரன் சிங்
2) ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்)
3) ஷ்ரேயாஸ் ஐயர்
4) கிளென் மேக்ஸ்வெல்
5) மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்
6) நேஹல் வதேரா
7) சஷாங்க் சிங்
8) மார்கோ யான்சன்
9) ஹர்ப்ரீத் பிரார்
10) ஆர்ஷ்தீப் சிங்
11) யுஸ்வேந்திர சஹால்
இம்பேக்ட் பிளேயர்: வைஷாக் விஜயகுமார் அல்லது யாஷ் தாக்கூர்
பஞ்சாப் செய்த தவறு என்ன?
இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் செய்திருக்கும் ஒரு தவறு ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த இந்திய ஓப்பனரை தேர்வு செய்யாமல் போனது. டெல்லியைச் சேர்ந்த இளம் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ரூ. 3.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், பிரப்சிம்ரனோடு இன்னொரு இளம் வீரர் ஆடும்போது அது நிச்சயம் இருவருக்குமே நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், ஜோஷ் இங்லிஸ் போன்ற ஒரு அனுபவ வீரரை களமிறக்குவது அவசியம். ஆனால், பிரச்சனை என்னவெனில் ஐபிஎல் அரங்கில் பெரிதும் சோபித்திடாத இங்லிஸுக்கு சரியான பேக் அப் ஆப்ஷன் இல்லை. அவர் சரியாக ஆடாமல் போனால், ஸ்டோய்னிஸ் போன்ற ஒரு வீரரை பஞ்சாப் அணி ஓப்பனராக களமிறக்க வேண்டிய தேவை ஏற்படும்.
மற்ற இடங்கள் அந்த அணிக்கு சிறப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் மார்கோ யான்சன் போன்ற ஒரு ஹிட்டர் எட்டாவது வீரராக வருகிறார் என்றால் அது எப்படிப்பட்ட நம்பிக்கை கொடுக்கவேண்டும். அடுத்த இடத்தில் ஆடக்கூடிய பிரார் கூட ஓரளவு நன்றாக பேட்டிங் செய்வார். அதேபோல் பந்துவீச்சுக்கும் சிறப்பான ஆள்கள் இருக்கிறார்கள். இம்பேக்ட் பிளேயர் ஐந்தாவது பௌலர் ஆகிடும் பட்சத்தில், அதுபோக ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் என தரமான ஆல் ரவுண்ட் ஆப்ஷன்கள் இருக்கின்றன. வெளியே பேக் அப் ஆக ஆரோன் ஹார்டி, அஸ்மத்துல்லா ஓமர்சாய் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சுக்கும் லாக்கி ஃபெர்குசன், ஜேவியர் பார்ட்லெட் ஆகியோரை எடுத்திருக்கிறார்கள். அணி முழுக்க ஆஸ்திரேலிய வீரர்களாக இருந்தாலும், ஓரளவு நல்ல லெவனை உருவாக்கக்கூடிய வகையிலேயே செயல்பட்டிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.