தேர்வுக் குழு பதவி | அதிரடி முடிவெடுத்த அஜித் அகர்கர்.. பிசிசியின் அடுத்த திட்டம் என்ன?
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருக்கும் அஜித் அகர்கர், அந்தப் பதவியில் இருந்து விலக இருப்பதாக, பிசிசிஐ உயர் அதிகாரிகளிடம் உறுதிப்பட தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருப்பவர், அஜித் அகர்கர். ஜூலை 2023-இல் பொறுப்பேற்ற அகர்கரின் தலைமையிலான தேர்வுக் குழுவின் காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இது தவிர வேறு சில தொடர்களையும் வென்றுள்ளது. இந்தச் சூழலில், அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
எனினும், அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்வுக் குழுத் தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அதிகாரிகள் அகர்கருடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அவரது ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தனது பதவியில் தொடரப் போவதில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐயிடம் உறுதிப்படத் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பிசிசிஐ வேறு ஒரு புதிய தலைமைத் தேர்வாளரைத் தேடும் பணியைத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2027 உலகக் கோப்பை திட்டத்தில் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து தொடரின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, ரோஹித் சர்மா இல்லை என்று தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கடும் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா பிசிசிஐ உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தேர்வுக்குழுவின் கருத்துக்கு மாறாக, ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியில் முக்கியமான வீரராக நீடிப்பார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பகிரங்கமாக அறிவித்தார். இதனால், பிசிசிஐ-க்கும், தேர்வுக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதால், பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்தை அகர்கர் புறக்கணித்திருந்ததும் விவாதங்களை ஏற்படுத்தியது.

