Adam Zampa | பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் அனைத்திலும் கலக்கிய ஆடம் ஜாம்பா..!

கடைசி கட்டத்தில் இங்கிலாந்து பௌலர்கள் தங்கள் பேட்டிங் மூலம் ஆஸ்திரேலியாவை சற்று சோதித்தார்கள். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் வில்லி, ஹேசில்வுட் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்தார்.
ஆடம் ஜாம்பா
ஆடம் ஜாம்பாShashank Parade
போட்டி 36: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
முடிவு: 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா: 286 ஆல் அவுட் (ஓவர்கள் - 49.3)
இங்கிலாந்து: 253 ஆல் அவுட் (ஓவர்கள் - 48.1)
ஆட்ட நாயகன்: ஆடம் ஜாம்பா (பேட்டிங்: 19 பந்துகளில் 29 ரன்கள், 4 ஃபோர்கள்; பௌலிங்: 10-0-21-3)

பேட்டிங்:

எட்டாவது விக்கெட்டாக பேட் கம்மின்ஸ் அவுட்டாகி வெளியேறியபோது 44.2 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 50 ஓவர்கள் ஆடுவது சந்தேகம் என்றிருந்த நிலையில், 260-265 ரன்களே அந்த அணிக்கு எட்ட முடியாத இலக்கு போல் தெரிந்தது. ஆனால் ஜாம்பா தன் அசத்தல் பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவை நல்ல ஸ்கோர் எடுக்க வைத்தார்.

எதிர்முனையில் ஸ்டார்க் இருக்க, அவருக்கு சிங்கிள் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தார் ஜாம்பா. ஸ்டிரைக் ரொடேட் செய்வது முக்கியம் என்பதை உணர்ந்த அவர், அதை மிகச் சிறப்பாக செய்தார். அவர் சந்தித்த முதல் ஐந்து பந்துகளிலுமே சிங்கிள் எடுத்தார். 47வது ஓவரில் அதிர்ஷ்டம் அவர் பக்கம் அடிக்கத் தொடங்கியது. வுட் வீசிய அதிவேக பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜாகி ஃபோர் ஆனது. அந்த பௌண்டரி கொடுத்த நம்பிக்கையோடு அடுத்த பந்தையும் ஃபோர் ஆக்கினார் ஜாம்பா. ஃபுல் லென்த்தில் வீசப்பட்ட பந்தை அவர் டிரைவ் செய்ய, அது எல்லைக்கோட்டுக்கு பறந்தது. அதன்பின் வோக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர், பின்னர் வில்லி வீசிய 49வது ஓவரிலும் ஒரு ஃபோர் என அசத்தினார் அவர். பௌண்டரிகள் வந்தாலும் தவறாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார். அதனால் 49வது ஓவர் முடிவிலேயே 285 ரன்களை எட்டியது இங்கிலாந்து. ஜாம்பா களத்தில் இருந்தது 300 என்ற கனவை உயிர்ப்போடு வைத்திருந்தது. அதை எட்ட கடைசி ஓவரின் முதல் பந்தை காற்றில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் ஜாம்பா. இருந்தாலும் அவருடைய இந்த இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு சுமார் 15-20 ரன்கள் அதிகமாக ஏற்படுத்திக்கொடுத்தது.

பௌலிங்

Adam Zampa
Adam ZampaShashank Parade

பேட்டிங்கில் எப்படி பொறுப்பாக ஸ்டிரைக் ரொடேஷனை செய்தாரோ, பந்துவீச்சில் அதேபோல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரொடேட் செய்யாமல் டாட் பால் ஆட வைத்தார். வேகப்பந்துவீச்சை ஓரளவு நன்கு சமாளித்து ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜாம்பாவின் சுழலை மிகவும் கவனமாகக் கையாண்டனர். அதனால் அவர் ஓவரில் ரன்களே வரவில்லை. அவர் வீசிய முதல் 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களே வந்தன. அந்த 10 ரன்களும் முழுமையாக சிங்கிள்களால் வந்தவையே. அந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக பந்துவீசினார் ஜாம்பா. 23 - 25 ஓவர்கள் இங்கிலாந்துக்கு மிகவும் இக்கட்டாக இருந்தன. கம்மின்ஸ் ஒரு (டேவிட் மலான்) விக்கெட் வீழ்த்தியதோடு அடுத்த ஓவரை மெய்டனாக வீசியிருந்தார். இன்னொரு பக்கம் ஜாம்பா ரன் அடிக்க விடாமல் பந்துவீசியிருந்தார். அதனால் ஜாம்பாவின் அடுத்த ஓவரில் முதல் பந்தையே விளாச முயன்றார் பட்லர். ஆனால் சரியாக டைம் செய்ய முடியாமல் கேட்ச் ஆனார். இப்படித்தான் தொடர்ந்து சிக்கனமாகப் பந்துவீசி, டாட் பால்கள் மூலம் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தார் அவர். அதன் விளைவாக நன்கு செட்டில் ஆகியிருந்த பென் ஸ்டோக்ஸ் (64 ரன்கள்), மொயீன் அலி (42 ரன்கள்) ஆகியோரும் கூட அவரது பந்துவீச்சில் பௌண்டரி அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆனார்கள். பட்லர், ஸ்டோக்ஸ், மொயீன் - சாதாரண விக்கெட்டுகளா!

ஃபீல்டிங்

ஆடம் ஜாம்பா
Fakhar Zaman | அதிரடியும் அமைதியும் கலந்த அசத்தலான ஆட்டம்..!

பேட்டிங், பௌலிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்தினார் ஜாம்பா. கடைசி கட்டத்தில் இங்கிலாந்து பௌலர்கள் தங்கள் பேட்டிங் மூலம் ஆஸ்திரேலியாவை சற்று சோதித்தார்கள். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் வில்லி, ஹேசில்வுட் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்தார். ஆனால் அங்கு யாருமே நிற்கவில்லை. டீப் ஃபைன் லெக் பொசிஷனில் நின்றிந்த ஜாம்பா, புயல் வேகத்தில் ஓடி வந்து டைவ் அடித்து அந்த கேட்சைப் பிடித்தார். அந்த அசத்தலான கேட்சைப் பிடிக்க அவர் ஓடி வந்த தூரம் 27 மீட்டர்கள்!

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

ஆடம் ஜாம்பா
INDvSA | இன்னிக்கு ஒரு செம்ம மேட்ச் காத்திருக்கு பிரென்ஸ்..!

"ஆட்ட சூழ்நிலையை நன்றாக அறிந்துகொண்டிருந்தோம். நாங்கள் மிகவும் சவாலான ஸ்கோரை எட்டியிருக்கிறோம் என்று நினைத்தோம். மைதானம் மிகவும் ஈராமாகிக்கொண்டிருந்தது. என் பந்துவீச்சைப் பொறுத்தவரை என்ன லென்த்தில் பந்தை பிட்ச் செய்கிறேன் என்பதை கன்ட்ரோல் செய்வதும், ஸ்டம்புகளை அட்டாக் செய்வதும், பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கணிப்பதும் தான் முக்கிய சாராம்சங்கள். சொல்லப்போனால் இன்று என்னுடைய மிகச் சிறந்த செயல்பாடுகளுள் ஒன்று வெளிப்பட்டது என்று நினைக்கிறேன். பேட்டிங் செய்யும்போது பாசிடிவாக ஆடி 50 ஓவர்கள் கடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினேன். முக்கியமாக ஸ்டிரைக்கை நன்றாக ரொடேட் செய்து இன்னிங்ஸ் முழுவதும் நிலைத்திருக்கவேண்டும் என்பதை அறிந்திருந்தேன்" என்று கூறினார் ஆடம் ஜாம்பா. டேவிட் வில்லியின் அந்த அபார கேட்சைப் பிடித்தது பற்றி கேட்டபோது, "ஒருசில முறை பந்து நம் கையோடு ஒட்டிக்கொள்ளும். எல்லாம் நமக்கு சாதகமாக அமையும். இது அப்படி ஒரு நாள் என்று நினைக்கிறேன்"

ஜாம்பா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com