INDvSA | இன்னிக்கு ஒரு செம்ம மேட்ச் காத்திருக்கு பிரென்ஸ்..!

இந்தப் போட்டியில் வெல்லும் அணி தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். பாகிஸ்தான், நியூசிலாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுள் ஏதாவதொரு அணியை அந்த அணிக்கு சந்திக்கவேண்டிவரும்.
Virat Kohli
Virat KohliSwapan Mahapatra
போட்டி 37: இந்தியா vs தென்னாப்பிரிக்கா
மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 5, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இந்தியா
போட்டிகள் - 7, வெற்றிகள் - 7, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 14
புள்ளிப் பட்டியலில் இடம்: முதலாவது
சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 442 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 15 விக்கெட்டுகள்
விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீர நடை போட்டுக்கொண்டிருக்கிறது இந்திய அணி. முதல் 5 போட்டிகளையும் சேஸ் செய்த இந்தியா, முந்தைய இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தையும், இலங்கையையும் முதலில் பேட்டிங் செய்து வென்றிருக்கிறது. அதிலும் கடைசிப் போட்டியில் இலங்கையை 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

Quinton de Kock
Quinton de Kock -

தென்னாப்பிரிக்கா
போட்டிகள் - 7, வெற்றிகள் - 6, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 12
சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 545 ரன்கள்
சிறந்த பௌலர்: மார்கோ யான்சன் - 16 விக்கெட்டுகள்
முதலிரு போட்டிகளில் பெரும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்துக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. அது அந்த அணியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்தடுத்து 4 வெற்றிகளைப் பதிவு செய்து கெத்தாக வலம் வருகிறது தென்னாப்பிரிக்கா. இந்த உலகக் கோப்பையில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்த 5 போட்டிகளிலுமே 300 ரன்களைக் கடந்திருக்கிறார்கள்.

மைதானம் எப்படி இருக்கும்?

இந்த உலகக் கோப்பையில் இதுவரை 2 போட்டிகள் ஈடனில் நடைபெற்றிருக்கின்றன. ஒன்றில் முதலில் பேட் செய்த அணியும், மற்றொன்றில் சேஸ் செய்த அணியும் வென்றிருக்கின்றன. முதலில் பேட் செய்த அணிகளால் பெரிய ஸ்கோரும் அடிக்க முடியவில்லை. இங்கு முதலில் பேட்டிங் செய்து நெதர்லாந்து அணி 229 ரன்களும், வங்கதேசம் 204 ரன்களுமே எடுத்தன. ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓரளவு இங்கு நன்கு செயல்பட்டிருக்கிறார்கள். அதனால் அனைவரும் எதிர்பார்ப்பதைப் போல் இங்கு ரன் மழை பொழிய வாய்ப்பில்லை. தென்னாப்பிரிக்கா இதுவரை ஆடியதிலிருந்து வேறொரு களமாக இது இருக்கும்.

முதல் இடம், முதல் பேட்டிங், முதல் பௌலிங்..!

இந்த இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலும் இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்தப் போட்டியில் வெல்லும் அணி தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு அரையிறுதி சற்று எளிதாக இருக்கும். பாகிஸ்தான், நியூசிலாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுள் ஏதாவதொரு அணியை அந்த அணிக்கு சந்திக்கவேண்டிவரும். ஒருவேளை முதலிடம் பிடிக்காவிட்டால் ஆஸ்திரேலியாவுடன் மோதவேண்டிய நிலை ஏற்படும். அதுவும் வான்கடே மைதானத்தில்! அது நிச்சயம் ரிஸ்க் தான். அதனால் இரு அணிகளுக்குமே முதலிடத்தைப் பிடிக்க இது மிகவும் முக்கியமான போட்டி.

இந்த இரு அணிகளுக்கும் முன்னால் இருக்கும் மற்றொரு கேள்வி டாஸ் வென்றால் இந்த அணிகள் எதை தேர்வு செய்யும் என்பது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதேசமயம் இந்திய அணி சிறப்பாக சேஸ் செய்கிறது. அதனால் இவ்விரு அணிகளும் தங்கள் ஃபேவரிட் முடிவை எடுப்பார்களா இல்லை எதிரணிக்கு சவால் தருவார்களா என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்திய அணி சேஸிங்கில் கில்லியாக செயல்பட்டாலும், கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக டிஃபன்ஸும் செய்திருக்கிறது. அதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து தென்னாப்பிரிக்காவை சேஸ் செய்ய நிர்பந்திக்கச் செய்தாலும் அது பெரிய பாதகமாக அமையாது. அதனால் இந்தியாவை விட டாஸ் வெல்வது தென்னாப்பிரிக்க அணிக்கு முக்கியம்.

எல்லோரும் கிளிக் ஆயாச்சு!

Prasidh Krishna
Prasidh Krishna Shailendra Bhojak

இந்திய அணிக்கு ஒரேயொரு சிக்கல் எனில், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடரிலிருந்து வெளியேறியிருப்பது தான். அவருக்குப் பதில் அணியில் இணைந்திருக்கும் பிரசித் கிருஷ்ணா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பேக் அப் ஆக இருப்பார். மற்றபடி ஒட்டுமொத்த அணியுமே நல்ல ஃபார்மில் இருக்கிறது. இலங்கை போட்டிக்கான பிரிவ்யூவில் 3 இந்திய வீரர்கள் (கில், ஷ்ரேயாஸ், சிராஜ்) தடுமாறுவதாக எழுதியிருந்தோம். அந்தப் போட்டியிலேயே அவர்கள் மூவரும் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். டி காக் மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்ற நிலையில், சிராஜ் ஃபார்முக்கு திரும்பியிருப்பது மிகப் பெரிய பலம். பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் மார்கோ யான்சனை ரோஹித் ஷர்மா எப்படி எதிர்கொள்கிறார் என்பது இந்திய இன்னிங்ஸுக்கு மிகவும் முக்கியம்.

இந்திய பௌலிங்கை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா

இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த பேட்டிங் என்றால் அது தென்னாப்பிரிக்கா தான். அந்த பேட்டிங் யூனிட் இன்று மிகச் சிறந்த பௌலிங் யூனிட்டை சந்திக்கிறது. இது நிச்சயம் மிகச் சிறந்த யுத்தமாக அமையும். டி காக் vs பும்ரா, மார்க்ரம் vs குல்தீப் போன்ற யுத்தங்கள் இந்தப் போட்டியை தீர்மானிக்கலாம். இதுவரை சந்தித்திடாத அளவுக்கான சவாலை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சந்திக்கப் போகிறார்கள். அவர்களின் பவர்பிளே அணுகுமுறைதான் அவர்களின் இன்னிங்ஸ் எப்படிச் செல்கிறது என்பதை தீர்மானிக்கும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

இந்தியா - விராட் கோலி: இரண்டு முறை 49வது ஒருநாள் சதம் தவறிவிட்டது. அதை தன் பிறந்த நாளன்று அடைய நிச்சயம் கோலி நினைப்பார்.

தென்னாப்பிரிக்கா - மார்கோ யான்சன்: ஏற்கெனவே 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். பவர்பிளேவில் மட்டும் 12 விக்கெட்டுகள். இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com