’சிக்சராக மாறிய WIDE பந்து..’ கிரிக்கெட் களத்தில் நடந்த சுவாரசியம்! வைரல் வீடியோ
அமெரிக்க பந்துவீச்சாளர் அலிகான் வீசிய பந்து தலைக்குமேல் பறந்து சிக்சர் லைனை கடந்ததால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் 7 ரன்கள் வழங்கப்படும் என நினைத்த நிலையில், 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
சில நேரங்களில் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும்கூட 'இப்போ என்னதான் நடந்தது?, இதை ஏன் செய்தார்கள் என்று வியக்கும் தருணங்கள் நடக்கும். அப்படியான ஒரு நிலைதான், டொராண்டோ சிக்ஸர்ஸ் மற்றும் மிசிசாகா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான கனடா சூப்பர்60 அரையிறுதிப் போட்டியில் நடந்தது.
கிரன் பொல்லார்ட் பேட்டிங் செய்த நிலையில், அவருக்கு பந்துவீசிய அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் அலிகான் பவுன்சராக வீச, அந்தப்பந்து பேட்ஸ்மேன், கீப்பர் இருவரின் தலைக்குமேல் சென்று சிக்சர் லைனையும் கடந்துவிழுந்தது. விக்கெட் கீப்பருக்கு பின்னால் உள்ள நீளம் குறைவானது என்பதால் அந்த பந்து சிக்சருக்கு பறந்தது. அதைப்பார்த்த ரசிகர்களுக்கு ‘இவ்வளவு பக்கமாவா சிக்ஸ் லைன் வைப்பீங்க’ என்றிருந்தாலும், சிக்சர் தானே சென்றது ஆனால் ஏன் அம்பயர் ஒயிட் உடன் சேர்த்து பவுண்டரியாக மட்டும் கொடுத்தார் என்ற குழப்பம் ஏற்பட்டது. ஒயிட் பந்தாக அறிவித்த அம்பயர் 7 ரன் கொடுக்காமல் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தக்குழப்பம் அந்தப்போட்டியின் வர்ணனையாளர்களுக்குமே ஏற்பட்டது.
இந்தசூழலில் தான் எம்.சி.சி கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு பந்து முழுமையாக பவுண்டரியைக் கடப்பதற்கு முன் மட்டையால் அடிக்கப்பட்டால் மட்டுமே அது சிக்ஸராகக் கருதப்படும். அதாவது அலி கான் வீசிய பந்துடன் பொல்லார்ட் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே, பந்து சிக்ஸரைப் போல எல்லைக்கோட்டைத் தாண்டிப் பறந்தாலும், விதிகளின்படி அந்த பவுண்டரிப் பகுதி ஆறு ரன்களாக அல்லாமல் நான்கு ரன்களாகவே கணக்கிடப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

