ரஞ்சிக்கோப்பை| 21 வயதில் முச்சதம்.. யார் இந்த பிரியான்ஷு மொலியா?
ரஞ்சிக்கோப்பை தொடரில் பரோடா அணிக்காக 321 ரன்கள் குவித்த 21 வயது பிரியான்ஷு மொலியா, அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனை படைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது தந்தையின் ஆதரவும், மொஹிந்தர் அமர்நாத் அகாடமியில் பெற்ற பயிற்சியும் அவரை முன்னணி வீரராக உருவாக்கியது.
2026-27 ரஞ்சிக்கோப்பை தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. பரோடா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 616 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளது. இதில் 3வது வீரராக களமிறங்கிய 21 வயது பிரியான்ஷு மொலியா 36 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் 321 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பரோடா அணிக்காக முச்சதம் விளாசிய பிரியான்ஷு மொலியா, ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் பரோடா அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த வீரராக சாதனை படைத்தார்.
பிரியான்ஷூ மொலியாவின் தந்தை சுரேஷ், தன் மகன் கிரிக்கெட்டை தீவிரமாகத் தொடர வேண்டும் என்பதற்காக ராஜ்கோட்டிலிருந்து வதோதராவுக்குக் குடிபெயர்ந்திருந்தார். அங்கு மொகிந்தர் லாலா அமர்நாத் கிரிக்கெட் அகாடமியில் இணைந்த பிரியான்ஷூ இந்திய ஜாம்பவான் மொஹிந்தர் அமர்நாத்தின் வழிகாட்டுதலின்படி தன்னை மெருகேற்றிக்கொண்டார்.
மொகிந்தர் லாலா அமர்நாத் கிரிக்கெட் அகாடமியில், மொலியா அடுத்தடுத்த சீசன்களில் 1,100 மற்றும் 1,500 ரன்கள் என குவித்து மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் எப்படி மொஹிந்தர் அமர்நாத் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்தினார் என பேசியிருக்கும் பிரியான்ஷூ, “ஜிம்மி (அமர்நாத்) சார் மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் எனக்குப் பயிற்சி அளிக்க உதவுவார். பரோடாவுக்கு வரும்போதெல்லாம் அகாடமிக்கு வந்து எப்படி பேட்டிங் செய்வது என்று எனக்கு வழிகாட்டுவார். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு சிறந்த ஆதரவாக இருந்தார்” என்று மொலியா கூறினார். மேலும், “இருப்பினும், கோவிட்-19 காரணமாக அகாடமி மூடப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார். மொஹிந்தர் அமர்நாத் 1983 உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் ஆவார்.
மேலும் அவருடைய சக்சஸ் குறித்து பேசிய அவர், “நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை மட்டுமே விளையாடுகிறேன்," என்று அந்த 21 வயது வீரர் ஸ்போர்ட்ஸ்டாரிடம் பேசியுள்ளார்.

