\
Gareth Batty - zaheer khan
Gareth Batty - zaheer khancsk

ஒரு அரைசதம் கூட அடிக்காதவர் பேட்டிங் கோச்சா..? CSK-ன் வியூகம்தான் என்ன? சாதகமா? பாதகமா?

சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 20 போட்டிகளே விளையாடிய, ஒரு அரைசதம், சதம் கூட அடிக்காத ஒருவரை பேட்டிங் கோச்சாக நியமித்துள்ளது
Published on: 
Summary

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மைக் ஹஸ்ஸி போன்ற பேட்டிங் லெஜெண்டை வெளியேற்றிவிட்டு, பவுலிங் ஆல்ரவுண்டர் கேரத் பேட்டியை சேர்த்தது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. பவுலிங் பலப்படுத்தும் முயற்சியில் பேட்டிங் பலவீனப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர்களுடைய முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழுவை மொத்தமாக கலைத்துள்ளது. முந்தைய பயிற்சியாளர் குழுவிலிருந்த துணை பவுலிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஸ்ரீராம் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் இருவர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ், உதவிப் பயிற்சியாளர் ராஜிவ் குமார் உட்பட நீண்டகால உடற்தகுதி பயிற்சியாளரான கிரெக் கிங் (Greg King) மற்றும் தலைமை பிசியோதெரபிஸ்டான டாமி சிம்செக் (Tommy Simsek) ஆகியோரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப்பட்டியலிலிருந்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் வெளியேற்றப்பட்டிருப்பது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிஎஸ்கே பேட்டிங் நல்லா தானே இருந்துச்சு, அவரை ஏன் வெளியேற்றுனீங்க? என்ற கேள்வியை ரசிகர்கள் வைத்துள்ளனர். அவருக்கு பதிலாக உதவி பயிற்சியாளராக கேரத் பேட்டி சிஎஸ்கே அணிக்குள் எடுத்துவரப்பட்டுள்ளார்.

புதிய பயிற்சியாளர்கள் பட்டியலில் தற்போது தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான், பந்துவீச்சு பயிற்சியாளர் மோஹித் சர்மா, உதவி பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதர் ஸ்ரீராம், உதவி பயிற்சியாளர் ஆல்பி மோர்கல், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபோஸ்டர், உதவி பயிற்சியாளர் கேரத் பேட்டி என நியமிக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சுக்கு ஜாகீர் கானுடன் சேர்த்து மோஹித், ஸ்ரீதர் என இருக்கும்போது, கேரத் பேட்டி பேட்டிங்காகவே எடுத்துவரப்பட்டுள்ளார் என தெரிகிறது.

கேரத் கேட்டியை பொறுத்தவரையில் அவர் இங்கிலாந்து முன்னாள் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். ஆனால் அவர் 9 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியிருந்தாலும் ஒரு சர்வதேச அரைசதம் கூட அடித்ததில்லை. மாறாக பந்துவீச்சிலும் சர்வதேச அளவில் பெரிய நம்பர்கள் இல்லை. ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் பேட்டிங்கில் இல்லாமல், பந்துவீச்சில் 600க்கு மேல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இவர் கவுண்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக 3 கோப்பைகளையும், ஒரு ரன்னர் அப் வரை அணியை எடுத்துச்சென்றது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் மைக் ஹஸ்ஸி போன்ற ரன் மெஷினை வெளியேற்றிவிட்டு கேரத் பேட்டியை கொண்டுவந்திருப்பது எந்தளவு சரியாக இருக்கும் என தெரியவில்லை. அடிப்படையில் கேரத் பேட்டியும் ஒரு பவுலர் என்பதால், சிஎஸ்கேவின் பயிற்சியாளர்கள் குழுவே ஆல்பி மோர்கல் உட்பட பந்துவீச்சு குழுவாகவே தெரிகிறது.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மோசமாக இருக்கிறது என்பதற்காக பவுலிங்கை பலப்படுத்திவிட்டு பேட்டிங்கை பலவீனப்படுத்தும் முயற்சியாக அமைந்துவிடக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இளம்வீரர்களை நன்றாக தயார் செய்வதில் கேரத் பேட்டி சிறப்பாக செயல்படுவார் என தெரிகிறது. மேலும் ஜகீர் மற்றும் கேரத் இருவரும் கவுண்ட்டியில் ஒரே அணியில் விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கடந்து பிரத்யேக பேட்டிங் லெஜெண்ட் சிஎஸ்கே பயிற்சியாளர் குழுவில் இல்லாதது பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com