2009 - 2026 | அரசியல் எதிர்ப்பால் IPL-ல் விளையாடாமல் போன வீரர்கள் யார்? யார்? விவரம்!
அரசியல் எதிர்ப்பால் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்காமல் போன சம்பவங்களை இங்கே பார்க்கலாம்..
பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க தடை
ஐபிஎல் தொடரில் அரசியல் எதிர்ப்பால் வெளிநாட்டு வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராகவே முதலில் நடந்தது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களை தடை செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
இந்த தடை சம்பவத்தின் போதும் ஐபிஎல் பிரான்சைஸ் அணிகள் மற்றும் பிசிசிஐ இரண்டு தரப்புக்கும் இடையே விவாதங்கள் இருக்கவே செய்தன. அப்போதும் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படாதது அவமானகரமானது என கூறி தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்தார் கேகேஆர் அணி உரிமையாளர் ஷாருக் கான்.
2009ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் 2012 முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு தொடர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சல்மான் பட், முகமது ஹஃபீஸ், ஷாஹித் அப்ரிடி, கம்ரான் அக்மல், ஷோயப் அக்தர் போன்ற வீரர்கள் முதல் சீசனில் விளையாடியிருந்தனர்.
இலங்கை வீரர்களுக்கு எதிராக வலுத்த எதிர்ப்பு
இலங்கை ஈழப்போருக்கு பிறகான தமிழக மக்களின் மனநிலை என்பது பல வெறுப்புகளையும் வேதனைகளையும் கொண்டது. அதன் பிரதிபலிப்பென்பது, அரசியலை தாண்டி விளையாட்டில் கூட தீவிரமாகவே இருந்தது.
உதாரணத்துக்கு 2013 ஐபிஎல் சீசனில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் பதற்றங்கள் மிக அதிகமாக இருந்தன. அதனால் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பங்கேற்க கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியது.
இந்தசூழலில் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் எந்த போட்டியையும் சென்னை நடத்தாது என்று தீர்மானமே கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரன், குலசேகரா மற்றும் தனஞ்செயா இருவரும் சென்னை போட்டியின் போது களமிறக்கப்படாமல் இருந்தனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பயோபிக் திரைப்படத்தில் தமிழக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியான போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்பிற்கு பிறகு படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
மேலும் 2012 ஐபிஎல்லின் போது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ்பாக் தடை செய்யப்பட்டார். அவர் அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியிருந்தார்.
வங்கதேச வீரருக்கு எதிராக எழுந்த வெறுப்பு
மேற்கண்ட சம்பவங்களை தொடர்ந்து 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் தீபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல் என்ற இரண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கிய கொல்கத்தா அணி மீதும், அதன் உரிமையாளர் ஷாருக் கான் மீதும் திரும்பியது.
ஒருபக்கம் உஜ்ஜைனி சாமியார்கள் வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாடினால் மைதானத்தில் புகுந்து பிட்ச்சை தோண்டி எடுப்போம் என்று பகிரங்கமாக தெரிவித்தனர். மறுபக்கம் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஷாருக் கான் துரோகி என்று கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்தசூழலில் தான் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு, வங்கதேச வீரரான முஸ்தஃபிசூரை வெளியேற்ற வேண்டும் என கேகேஆர் அணியை வலியுறுத்தியுள்ளது பிசிசிஐ. இன்னும் கேகேஆர் அணி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. 2026 ஐபிஎல்லில் விளையாட தேர்வான ஒரே வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் என்பது குறிப்பிடத்தக்கது..

