நான் தான் அடுத்த ஜடேஜாவா..? தோனி சொன்ன முதல் அட்வைஸ்.. 20 வயது பிரசாந்த் வீர் ஓபன்!
2026 ஐபிஎல் தொடரில் தோனி இல்லாத சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. 20 வயது பிரசாந்த் வீர், தோனியிடம் இருந்து கிரிக்கெட்டை பற்றி அல்லாமல் பெற்ற முதல் அறிவுரை குறித்து பேசினார்.
தோனி இல்லாத சிஎஸ்கே அணி எப்படி இருக்கும்..? 5 கோப்பை வென்ற மாஸ்டர் மைண்ட் இல்லாதபோதும் கோப்பை வெல்லும் யுக்தியை சிஎஸ்கே கற்றுக்கொள்ளுமா..? என்ற மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையாக 2026 ஐபிஎல் தொடர் இருக்கப்போகிறது.
’வீரர்கள் வரலாம் போகலாம், ஆனால் கிரிக்கெட்டும், அணியும் நிலைத்து நிற்கும்’ என்பதை உறுதிப்படுத்தவேண்டிய இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் கோப்பைக்காக பயணப்படுகிறது.
எப்போதும் அனுபவம் வாய்ந்த மூத்தவீரர்களை பயன்படுத்தி கோப்பை வெல்லும் யுக்தியானது, கடந்தமுறை சிஎஸ்கே அணிக்கு பலனளிக்காத நிலையில், 19 மற்றும் 20 வயது வீரர்கள் இரண்டு பேரை 28.40 கோடிக்கு விலைக்கு வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது சென்னை அணி.
ஜடேஜா, பதிரானா, சாம்கரன் போன்ற ஸ்டார் வீரர்களை வெளியேற்றிய அந்த அணி, இளம் வீரர்கள் கொண்ட படையுடன் 2026 ஐபிஎல்லில் விளையாடவிருக்கிறது.
இந்தசூழலில் 14.20 கோடி விலைக்கு வாங்கப்பட்ட 20 வயது ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர், தோனி தன்னிடம் பேசியமுதல் விசயம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
எப்போதும் இளம் வீரர்களுக்கு தன்னுடைய கிரிக்கெட் அனுபவத்தை பகிரும் மகேந்திர சிங் தோனி, இந்தமுறை பிரசாந்த் வீருக்கு பணத்தை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளார்.
தோனியுடன் உரையாடியது குறித்து பேசியிருக்கும் 20 வயது பிரசாந்த் வீர், மஹி பாய் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி அதிகம் பேசவில்லை, மிகப்பெரிய ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தபிறகு, எனக்கு கிடைத்த பணத்தை எப்படி சேமிக்க வேண்டும், அதை தேவையில்லாமல் செலவு செய்யாதே என்று தான் எனக்கு அவர் முதல் அறிவுரை வழங்கினார் என்று பேசியுள்ளார்.
மேலும் தன்னை ஜடேஜா உடன் ஒப்பிடுவது குறித்து பேசிய வீர், ஜடேஜாவின் இடத்தை நான் பிடிக்க வேண்டும் என நினைத்தால், அது எனக்கு அழுத்தத்தை தான் அதிகம் கொடுக்கும். அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் செய்ததை ஈடுசெய்வது அவ்வளவு எளிதான விசயம் அல்ல. நான் என்னிடம் என்ன இருக்கிறதோ, எது என்னை இந்த இடத்திற்கு அழைத்துவந்ததோ அதை சரியாக செய்யவே முயற்சிக்கிறேன்” என கூறினார்.
தன்னால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கி அடிக்க முடியும் என்று கூறிய அவர், என்னால் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடியும். நான் ஓப்பனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வரை, வேறு எந்த இடத்திலும் என்னால் சிறந்ததைச் செய்ய முடியும். எனக்கு இது முதல் ஐபிஎல் என்பதால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்டதில்லை. இங்குள்ள சூழலும் தீவிரமும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ஆதரவாக இருக்கின்றனர். நான் இங்கே இருப்பது, எனக்கும், என் குடும்பத்திற்கும், என் கிராமத்திற்கும் கிடைத்த பாக்கியம் என்று பிரசாந்த் வீர் பேசியுள்ளார்.
மற்றொரு இளம் வீரரான 19 வயது கார்த்திக் சர்மா, தோனியிடமிருந்து ஃபினிசிங் செய்வதை கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வீரர்கள் ஜடேஜா மற்றும் தோனியின் இடத்தை நிரப்புவார்களா என்ற என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

