வெறும் 15 வயதுதான்.. சூர்யவன்ஷிகூட செய்யலை.. உலக சாதனை படைத்த ருவாண்டா வீராங்கனை!
நைஜீரியா அழைப்பு மகளிர் டி20 சர்வதேசத் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா நாட்டு வீராங்கனை ஃபானி உடகுஷிமானின்டே, இந்த மைல்கல்லை எட்டினார்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கிரிக்கெட்டின் வடிவங்களால் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டும் தோற்றுவிக்கப்பட்டும் வருகின்றன. அதிலும் டி20 கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் அசுரவளச்சி பெற்ற பிறகு, சாதனைகளுக்குக் கொஞ்சங்கூடப் பஞ்சமில்லாத வகையில் போட்டிகள் இருக்கின்றன. இது, ஆடவர் போட்டியில் மட்டுமல்ல, மகளிர் போட்டிகளிலும் தொடர்கின்றன என்பதுதான் வியப்பான செய்தியாகும்.
அந்த வகையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ருவாண்டா நாட்டு வீராங்கனை ஃபானி உடகுஷிமானின்டே சதமடித்து சாதனை படைத்துள்ளார். அவர் சாதனை படைத்தது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம். லாகோஸில் உள்ள தஃபாவா பலேவா சதுக்க கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நைஜீரியா அழைப்பு மகளிர் டி20 சர்வதேசத் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா நாட்டு வீராங்கனை ஃபானி உடகுஷிமானின்டே, இந்த மைல்கல்லை எட்டினார். அந்தப் போட்டியில் அவர, 65 பந்துகளில் 17 பவுண்டரிகள் உட்பட 111 ரன்களை விளாசினார்.
இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை உடகுஷிமானின்டே பெற்றார். இதற்கு முன்பு, 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீராங்கனை கரேன் ரோல்டன் தனது அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. மேலும், மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய வீராங்கனை என்ற உலகச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர், இதை வெறும் 15 வயது 223 நாட்களில் சாதித்துக் காட்டியுள்ளார்.
இதற்குமுன்பு, உகாண்டா நாட்டு வீராங்கனை புரோஸ்கோவியா அலாகோ, மாலிக்கு எதிராக 16 வயது மற்றும் 233 நாட்களில் 116 ரன்கள் எடுத்திருந்தார். ஆடவர் கிரிக்கெட்டில், டி20 சர்வதேசப் போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையை பிரான்ஸின் குஸ்டாவ் மெக்கியோன் படைத்துள்ளார். அவர் 2022-ஆம் ஆண்டு தனது 18 வயது 280 நாட்களில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக சதம் அடித்தார். இதன்மூலம், ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு கிரிக்கெட்டிலும் டி20 சர்வதேசப் போட்டியில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனை ஃபானி உடகுஷிமானின்டேவிடம் சென்றுள்ளது.

