India Top Records in 2023
India Top Records in 2023PT

Rewind 2023: ஒரே ஆண்டில் 289 விக்கெட்டுகள், 250 சிக்சர்கள்! இந்திய அணி படைத்த 10 இமாலய சாதனைகள்!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை தவறவிட்டபோதிலும், இந்த ஒரே ஆண்டில் மட்டும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

1. ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகள்!

2023-ம் ஆண்டானது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் வெறும் 35 ஒருநாள் போட்டிகளில் 23.34 சராசரி மற்றும் 5.1 என்ற எகானமியுடன் 289 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். இந்த 289 விக்கெட்டுகளில் எட்டுமுறை 5 விக்கெட்டுகளும் அடங்கும்.

Kuldeep Yadav
Kuldeep Yadav

ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா முதலிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு 2023 ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இதுவே ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு கிரிக்கெட் அணி எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.

2. ஒரு காலண்டர் ஆண்டில் அதிகமுறை 350+ ஸ்கோர்கள்!

Rohit Sharma
Rohit Sharma

பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இது ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்மூலம் இந்திய அணி இந்தாண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 9 முறை 350 ரன்களுக்கு மேலான டோட்டலை பதிவுசெய்துள்ளது. இதுவே ஒரு வருடத்தில் எந்தவொரு அணியும் அதிகமுறை பதிவுசெய்த ரெக்கார்டாகும்.

இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 7 முறை ஒருநாள் போட்டிகளில் 350 ரன்களைக் கடந்த இங்கிலாந்தின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

3. ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ODI சதங்கள் பதிவுசெய்த அணி!

விராட் கோலி
விராட் கோலி

2023-ம் ஆண்டில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் கூட்டாக 19 ஒருநாள் சதங்களை அடித்து அசத்தியுள்ளனர். இதுதான் ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணியால் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச சதங்களாகும். 2019-ம் ஆண்டு இந்தியா படைத்திருந்த அவர்களின் சாதனையை மீண்டுமொரு முறை படைத்துள்ளனர். இந்த சாதனையை இரண்டு செய்த ஒரே அணி இந்தியா மட்டும் தான்.

4. ஒரு வருடத்தில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் அணி!

Rohit Sharma
Rohit Sharma

2023-ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் 250 சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளனர். இந்த சாதனையை இதற்குமுன்பு ஒரு காலண்டர் ஆண்டில் எந்த ஒரு சர்வதேச அணியும் அடித்தது கிடையாது. தென்னாப்பிரிக்கா அணியை விட 25 சிக்சர்களை இந்திய வீரர்கள் அதிகமாக அடித்துள்ளனர்.

5. 2023-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

சிராஜ்
சிராஜ்

2023-ம் ஆண்டில் அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் முதல் 3 இடங்களில் இந்திய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தியாவின் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் 49 விக்கெட்டுகள், முகமது சிராஜ் 44 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

6. 2023-ல் அதிக ODI ரன்கள் அடித்த சர்வதேச வீரர்!

Gill
Gill

2023-ம் ஆண்டு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு சிறந்த ஆண்டாக மாறியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு ஜாம்பவான் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இவ்விரு வீரரகளையும் தோற்கடித்து மூன்றாவதாக ஒரு இந்திய வீரர் இந்தாண்டில் அதிக ஒடிஐ ரன்கள் அடித்த வீரராக மாறியுள்ளார். அது இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில்.

இந்தாண்டில் மட்டும் 29 ஒடிஐ போட்டிகளில் விளையாடியிருக்கும் கில், 63.36 சராசரி மற்றும் 105.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 1584 ரன்களை குவித்துள்ளார். அவருக்க அடுத்த இடத்தில் கோலி 1377 ரன்கள், ரோகித் 1255 ரன்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

7. ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டாவது அதிகபட்ச வெற்றிகள்!

Rohit Sharma
Rohit Sharma

2023ம் ஆண்டு 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி 35 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 35 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் வெற்றிபெற்றதே முதல் சாதனையாக இருந்துவருகிறது.

8. குறைவான போட்டிகளில் 13000 ரன்களை குவித்த முதல் வீரர்!

virat kohli
virat kohli

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13000 ஒருநாள் ரன்களை எட்டிய முதல் சர்வதேச வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோலி 2023-ல் படைத்தார். ஏற்கனவே 321 இன்னிங்ஸ்களில் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த உலக சாதனையை, 267 இன்னிங்ஸ்களில் எட்டி முறியடித்துள்ளார் விராட் கோலி.

9. உலகக்கோப்பை வரலாற்றில் 50 சிக்சர்கள்!

Rohit Sharma
Rohit Sharma

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 50 சிக்சர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு 2003 - 2019 வரை ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடியிருந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெய்ல் அடித்த 49 சிக்சர்களே சாதனையாக முதலிடத்திலிருந்தது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் வானவேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, உலகக்கோப்பை வரலாற்றில் 50 சிக்சர்களை பதிவுசெய்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.

10. 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரர்!

சச்சின் VS கோலி
சச்சின் VS கோலி

2023-ம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு மாபெரும் உலகசாதனையை படைத்தார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி.

2023 ஒருநாள் உலககோப்பையின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்த விராட் கோலி, உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com