நார்வே செஸ் 2026 | இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த இளம் கிராண்ட்மாஸ்டர்கள்!
நார்வே செஸ் 2026 தொடர் ஆஸ்லோ நகரில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. முதல் சுற்றிலேயே பல பரபரப்பான முடிவுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் அர்மகெடான் டைபிரேக்கரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
- செ.யுகேஷ்
பிரக்ஞானந்தா & குகேஷ் வெற்றி
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்லி சோ இடையேயான கிளாசிகல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற அர்மகெடான் டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி வெஸ்லி சோவை வீழ்த்தினார். உலக சாம்பியனான மற்றொரு இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார். கிளாசிகல் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கெய்மர் வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில், குகேஷ் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிராவுக்கு கொண்டுசென்றார். பின்னர் நடைபெற்ற அர்மகெடான் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய குகேஷ் வெற்றியை தன்வசப்படுத்தினார்.
இதேபோல் மகளிர் பிரிவில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக், நடப்பு மகளிர் உலக சாம்பியனான ஜு வெஞ்சனை எதிர்கொண்டார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிளாசிகல் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால், அர்மகெடான் டைபிரேக்கரில் திவ்யா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஹம்பி அதிர்ச்சி தோல்வி
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கோனேரு ஹம்பி, கசகஸ்தானின் பிபிசாரா அஸ்ஸௌபாயேவாவிடம் கிளாசிகல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்தார். மிடில்கேமில் கிடைத்த சாதகமான நிலையைச் சிறப்பாகப் பயன்படுத்திய பிபிசரா, ஹம்பியை வீழ்த்தி மகளிர் பிரிவில் முக்கிய வெற்றியை பதிவு செய்தார்.
அதேநேரத்தில், இந்திய வீரர்கள் அர்மகெடான் சுற்றுகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் மூலமாக தொடரின் அடுத்த சுற்றுகளுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோரின் வெற்றிகள் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.

